Tuesday, July 8, 2014

ஜெயமோகனின் வெள்ளையானை -சித்திரவீதிக்காரன்

ஆளும்வர்க்கத்தின் வாழ்வே பெரும்பாலும் வரலாறாக பதியப்படும் வேளையில் அடித்தட்டு மக்களின் பிளிறலாக வெள்ளையானை வருகிறது. எழுத்தாளர் ஜெயமோகனின் கொற்றவை, விஷ்ணுபுரம், காடு நாவல்களை வாசித்திருக்கிறேன். இம்மூன்றும் தமிழின் மிக முக்கியமான நாவல்கள். அந்த வரிசையில் இப்போது வெள்ளையானையும் சேர்ந்துவிட்டது.
வெள்ளையானை என்றதும் நினைவிற்கு வருவது மீனாட்சியம்மன் கோயிலில் சிவன் சன்னதியை சுற்றிவரும் போது துதிக்கை நீட்டி முன்னங்கால்களை எட்டெடுத்து வைத்து வெளிவருவது போல மூன்று பக்கமும் இருக்கும் வெள்ளையானை சிற்பங்கள்தான். இந்திரனின் வாகனமான ஐராவதமும் வெள்ளையானைதான். அது சாபம் நீங்கிய தலம் மதுரை. இன்றும் மதுரை வண்டியூர் தெப்பக்குளத்திற்கு அடுத்துள்ள ஊர் ஐராவதநல்லூர் என்றே அழைக்கப்படுகிறது. ஆனால், இந்நாவலில் மிகப்பெரிய பனிக்கட்டிதான் வெள்ளை யானையாக உருவகிக்கப்படுகிறது.
ஏய்டன் என்ற வெள்ளைக்கார அதிகாரியின் பார்வையில் இந்நாவல் விரிகிறது. நாவலின் நாயகரான ஏய்டன் எனக்கு மிகவும் நெருக்கமானவராகத் தோன்றுகிறார். தன்னுடைய செயல்களின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பும் அவர் மேல்தட்டு வர்க்கத்தால் பின் வாங்கிய கதைதான் வெள்ளையானை. நம்பிக்கையோடு பயணித்து சறுக்கல்களை சந்திக்கும் ஏய்டன் என்னைக் கவர்ந்ததில் ஆச்சர்யமில்லை.
ஏய்டன் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். அவரது தந்தை மாட்டுப்பண்ணை வைத்திருப்பவர். கடும் பஞ்சம் வந்த போதும் ஊரை விட்டு போகாமல் வாழ்ந்தவர். கல்விகற்று பிரிட்டிஷ் படையில் ஏய்டன் சேர்வது அவரது தந்தைக்கு பிடிக்கவில்லை. ஏய்டன் பிரிட்டிஷ் அதிகாரியானாலும் அவருக்கு எளிய மனிதர்களின் மீதான அன்பு குறையாமல் தன்னால் முடிந்த அளவு சேவை செய்கிறார்.
Ice House Madras 1851-80
மதுவில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அருந்துவதற்காக கப்பலில் வரும் பெரிய ஐஸ்கட்டிகளை ஐஸ்ஹவுஸில் வைத்து உடைத்து எடுத்து இந்தியாவின் பல பகுதிகளுக்கு அனுப்புகிறார்கள். பெரிய ஐஸ்கட்டி வெள்ளையானை போலத் தெரிகிறது ஏய்டனுக்கு. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் பனிகட்டியில் இருட்டு அறையில் பணி புரிகிறார்கள். அடிமட்டத் தொழிலாளர்களாகப் பணிபுரியும் தலித் மக்கள் மீதான சாதி இந்துக்களின் கொடுமையோடு வெள்ளைக்காரர்களும் அம்மக்களைச் சுரண்டுகிறார்கள். ஐஸ்ஹவுஸில் பணிபுரியும் ஒரு தம்பதி கொல்லப்பட ஏய்டன் அவர்களுக்கு ஆதரவாக போராடும் கதையே வெள்ளையானை.
நாம் வாசித்த சில கவிதைகள் பொருத்தமான சூழலில் நினைவுக்கு வந்து நமக்கு உத்வேகமூட்டும். இந்நாவலின் நாயகனான ஏய்டனோ ஷெல்லிதாசன். அவ்வப்போது ஷெல்லியின் வரிகள் நினைவிற்கு வர ஏய்டன் சிலிர்க்கிறார். எனக்கும் இப்படி அடிக்கடி பாரதி, நகுலன், விக்ரமாதித்யன் கவிதைகள் ஞாபகத்திற்கு வரும்.
இந்நாவலில் வரும் பாதிரியார், மரிஸா மனதில் நிற்கிறார்கள். காத்தவராயன் பாத்திரம் நடைமுறைக்கு மீறியதாகத் தோன்றினாலும் நாவல் முழுக்க பயணித்து நமக்கு பழக்கமாகிவிடுகிறார். ஏய்டன் ஐஸ்ஹவுஸில் இறந்த தொழிலாளியின் வீட்டைத் தேடிப் போகும் போது ஏய்டனுக்கு கொடுக்க ஏதுமில்லாமல் ஒற்றை நுங்கை கொடுக்கும் பாட்டியின் அன்பு மனதை நிறைக்கிறது.
பஞ்சத்தால் மக்கள் கொத்துக்கொத்தாக மரிப்பதை ஏய்டன் காணச் செல்வதை வாசிக்கும் போது நெஞ்சு கனத்துப் போகிறது. எப்போதும் கொடிய பஞ்சங்களில் எல்லாம் எளிய மக்களே இறந்து போகிறார்கள். ‘தொர’, ‘தொர’ என்ற அந்தப் பிஞ்சுக்குரல்கள் நம்மையும் கரைத்துவிடுகிறது. கிராமங்களில் எல்லோருக்கும் உணவுஉற்பத்தி செய்யும் விவசாயத்தொழிலாளர்கள் சாலைகளில் சாவது எத்தனை கொடுமை?
பஞ்சம் குறித்த அறிக்கைகளை எல்லாம் அரசு வழக்கம்போல புறந்தள்ளிவிட்டு அதை தயாரித்துக் கொடுத்த ஏய்டனை வேறு இடத்திற்கு மாற்றுகிறது. மேலும், அந்த அறிக்கையை வைத்து எளிய மக்களை சுரண்ட பெரிய கால்வாய் வெட்டவும் திட்டமிடுகிறார்கள். நாவலில் ஓரிடத்தில் அரசு குறித்து ஏய்டன் சொல்லும் வரிகள் எக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.
ஆட்சி என்பது என்ன? அது மேலோட்டமாக எவ்வளவுதான் சமத்துவம், நீதி, கருணை என்றெல்லாம் பேசினாலும் உள்ளே இருப்பது சுரண்டல்தான். அப்பட்டமான நேரடியான சுரண்டல். அந்தச்சுரண்டலைக் குற்றவுணர்ச்சியே இல்லாமல் செய்தால்மட்டும்தான் நான் நல்ல ஆட்சியாளனாக முடியும்.
ஐஸ்ஹவுஸில் அடிமட்டத் தொழிலாளர்களுக்கு கொஞ்சம் சலுகைகளும், ஊதியஉயர்வும் தர அமெரிக்க நிர்வாகத்தலைவர் முன்வரும்போது இங்குள்ள உயர்சாதி இந்துக்கள் அம்மக்களுக்கு சலுகைகள் தருவது பின் தங்களைப் பாதிக்கும் எனத் தடுப்பது எல்லாம் இன்றைக்கும் நிலவுகின்ற காட்சிகள். அன்பே சிவத்தில் நாசர் சொல்லும் வரிகள் நினைவிற்கு வந்தது பத்துபத்து ரூபாயா சம்பளம் ஏத்துனா நம்ப பேரனுங்க நாளைக்கு பிச்சை எடுக்க வேண்டி வரும். சம்பளம் எப்பயும் 910தான்னு சொல்லுவார். இன்றைக்கும் அரசு ஊழியரல்லாத அலுவலர்களும், முறைசாராத் தொழிலாளர்களும் படும்பாடு சொல்லிமாளாது.
அடித்தட்டு மக்களின் இந்தப் போராட்டம் பெரும் மாற்றமாக அமையுமென ஏய்டன் எண்ணி மகிழும்போதே ஏமாற்றமாக மாற்றிய ஆதிக்க சாதிவர்க்கங்களின் சூழ்ச்சி இன்னமும் தொடரத்தான் செய்கிறது. சகமனிதனை மனிதராக நினைக்கிற பண்பு அழிவது கொடுமை.
Vellaiyanai Inverted
வாசிப்பதற்கு சுகமாகயிருக்கிறது எழுத்து பதிப்பகத்தின் அச்சாக்கம். முகப்போவியம் மற்றும் உள்ளட்டை ஓவியங்களை இராமச்சந்திரன் மிக அற்புதமாக வரைந்திருக்கிறார். 1878 ஆண்டுகால பஞ்சத்தை நினைவூட்டும் கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்க்கும் போது இதுபோன்ற சூழல் இனி வரவே கூடாது என்ற எண்ணம் எழுகிறது.
ஜெயமோகனின் வெள்ளையானை தமிழக வரலாற்றில் 1878ல் நடந்த பஞ்சத்தையும் அதில் மாண்ட அடித்தட்டு மக்களையும், ஐஸ்ஹவுஸ் போராட்டத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. ஆங்கிலேய அதிகாரிகளிலும், பாதிரிகளிலும் ஒருசிலர் தங்கள் வாழ்க்கையை உண்மையாக வாழ்ந்துள்ளதும் பதிவாகியுள்ளது. ஜெயமோகனின் இந்நாவல் மிக அருமை. ஜெயமோகன் நாவல்களின் இரசிகனான எனக்கு வெள்ளையானையும் மிகவும் பிடித்துவிட்டது. நம்மவர் கமல்ஹாசனும் ஜெயமோகன் எழுத்தின் தீவிர வாசகர். நீங்களும் வெள்ளையானையை வாசித்துப் பாருங்கள்.

No comments:

Post a Comment