Tuesday, October 28, 2014

அறக் காய்ச்சல் முற்றுகையில் பிறழும் கலை மனம்-பி.ஆர். மகாதேவன்

முரஹரி ஐயங்கார் என்றொரு கதாபாத்திரம் இந்த நாவலில் வருகிறது. வக்கீல் தொழிலுக்குப் படித்திருக்கும் அவர் பிரிட்டிஷாருக்கு நிதி ஆலோசனைகள் வழங்கும் ஆடிட்டராகவும் இருக்கிறார். பஞ்ச காலத்தில் லட்சக்கணக்கில் தலித்கள் செத்து விழுவதை அவர்களுடைய விதி என்று எள்ளி நகையாடுகிறார்.  கூடவே பிரிட்டிஷாருக்குக் கூட்டிக் கொடுத்தும் தனது செல்வாக்கைப் பலப்படுத்திக்கொள்கிறார் என்று நாவலில் சொல்லப்படுகிறது. அப்படி ஒருவர் இருந்தாரா… அவர் அதைச் செய்தாரா என்பவையெல்லாம் நிரூபிக்க முடியாத புனைவு உண்மைகள். ’பெரியார் மண்’ணில் சுமார் 20-25 ஆண்டுகளுக்கு மேலாகத் தனியொருநபராக, இந்து ஆன்மிக மரபின் இலக்கிய ஆதரவாளராக வீரியத்துடன் செயல்பட்டுவரும் ஜெயமோகனே இதையும் செய்திருப்பதைப் பார்க்கும்போது வேதனையே மிஞ்சுகிறது.
தலித்கள் இந்து சாதியமைப்பில் கூடுதல் துன்பங்களை அனுபவித்த பிரிவினர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்தவகையில் சாதி இந்துக்கள் அனைவருமே குற்றம்சாட்டப்படவேண்டியவர்களே.  ஆனால், பிரிட்டிஷாருக்கு முந்தைய காலகட்டத்துக் கொடுமைகளுக்கு மட்டுமல்லாமல் பிரிட்டிஷாரின் காலகட்டத்தில் நடந்தவற்றுக்கும் சாதி இந்துக்களே காரணம் என்று சித்திரித்திருப்பது மிகப் பெரிய வரலாற்று மோசடியே. முரஹரி ஐய்யங்கார் என்ற அந்த ஒற்றைப் பிரதிநிதியின் வார்த்தைகளை ஒட்டுமொத்த இந்து சமூகத்தின் குரலாக முன்வைப்பது அநியாயம்.

வெள்ளை யானை, ஜெயமோகன், எழுத்து வெளியீடு, ரூ 400, பக்கம் 408.
உண்மையில் இப்படியான சிந்தனைக்கு அடிப்படையான காரணம் சாதி பற்றிய பிழையான புரிதலே.  தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு உலகம் முழுவதும் முகிழ்த்தெழுந்த சமத்துவ சமூக அமைப்பை இந்தியாவிலும் கொண்டுவர பிரிட்டிஷார் காலத்தில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. உலகின் பிற பகுதிகளில் கறுப்பர் வெளுப்பர், ஜெர்மானியர் யூதர் என இரட்டை அடுக்கே பிரதானமாக இருந்தது. அதாவது ஒடுக்கப்பட்ட பிரிவினரும் கணிசமான எண்ணிக்கையில் ஓரணியில் இருந்தனர்.  நவீன மக்களாட்சி உலகில் அந்த எண்ணிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதுவே சமத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபோது எதிர்பார்க்கும் பலன் கிடைக்க வழிவகுத்தன. அதோடு இனவெறி, நிற வெறி, மத வெறி போன்றவையெல்லாம் படு கொடூரமாக இருந்தன. எனவே, அவற்றுக்கு எதிரான குற்ற உணர்ச்சியும் மிக அதிகமாக இருந்தன. மேலும் மேற்குலகில் இயற்கை வளங்கள் அதிகம் மக்கள்தொகை குறைவு. அதோடு அவர்கள் காலனியாக்கல் மூலம் உலகின் வளங்கள் அனைத்தையும் கொள்ளையடிக்கவும் செய்தனர். எனவே, அந்த பகுதிகளில் சமத்துவத்தைக் கொண்டுவருவது எளிதாக இருந்தது. அதாவது அந்த நாட்டு மேல் அடுக்கினர் உலகின் உச்சிக்குச் சென்றனர். எனவே அங்கிருந்த கீழடுக்கினர் பிறபகுதிகளைவிட ஒப்பீட்டளவில் மேலான நிலைக்கு உயர்ந்தனர்.  இந்தியாவில் நிலைமை முற்றிலும் வேறானது. இங்கு இரட்டை அடுக்கு முறை இருந்திருக்கவில்லை. மையம் அழிக்கப்பட்ட அமைப்பு என்பதால் ஒடுக்குமுறை கொடூரமானதான இருந்திருக்கவில்லை. சமத்துவம் இருந்திருக்கவில்லை, ஆனால் சந்தோஷமான வாழ்க்கைக்கான வெளி அனைத்து சாதிகளுக்கும் இருந்தது. இயற்கை வளங்கள் குறைவு. மக்கள் தொகை அதிகம். இது போன்ற காரணங்களால் இங்கு சமத்துவத்தைக் கொண்டுவர முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் கடைநிலை சாதிகளை இடைநிலை சாதிகளோடு மோதவைத்துவிட்டன. இந்தக் காலகட்டத்தில் நடந்த வன்முறைகளை அடிப்படையாக வைத்து முந்தைய கால சாதிய சமூகத்தையும் அதே அளவுக்குக் கொடூரமானதாகச் சொல்லி இந்துப் பாரம்பரியத்தை முற்றாக நிராகரிக்கும் முடிவுக்கே அனைவரும் செல்கிறார்கள். உண்மையில் நோய்க்குத் தரப்பட்ட மருந்தினால்தான் (அதுவும்கூடத் தரப்பட்ட விதத்தில்தான்) நோய் முற்றியிருக்கிறது.  தவறு மருந்தைத் தந்த விதத்தில்தான் இருக்கிறதே தவிர நோய் அவ்வளவு கொடியது அல்ல.
இந்திய சாதி அமைப்பு மேற்கத்திய சமூகத்தைவிட அனைத்து அம்சங்களிலும் மேலானதாக இருந்திருக்கிறது என்பதுதான் இஸ்லாமிய ஆட்சிகாலத்திலும் அதற்கு முன்பாகவும் இங்கு வந்த பயணிகள், ஆய்வாளர்கள், மத போதகர்கள் ஆகியோரின் (இந்தியாவில் ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணம் உருவாகியிராத ஆரம்பகால கட்டத்தில் வந்தவர்கள்) ஆவணங்களில் இருந்தும் தெரியவந்திருக்கிறது. மேற்கத்திய உழைக்கும் வர்க்கத்தின் கூலியைவிட இந்திய உழைக்கும் வர்க்கத்தின் கூலி அதிகமாக இருந்தது என்பதுதான் அந்த ஆவணங்களில் இருந்து தெரியவரும் உண்மை. மேலும் இந்திய ஆன்மிக மரபும் துறவியர் பாரம்பரியமும் சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளில் இருந்து பெருமளவுக்கு விலகியதாகவே இருந்துவந்திருக்கிறது. இந்த விஷயங்களில் பெரும்பாலானவை ஜெயமோகன் வழியாகத்தான் தமிழ் வாசகப்பரப்பில் பதிவுசெய்யவும் பட்டிருக்கின்றன. ஆனால், இந்த நாவல் இந்த அம்சங்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டுப் புதிய சித்திரத்தைத் தீட்டியிருக்கிறது.
இந்து சாதி அமைப்பு மீதான இந்த மிகையான வெறுப்புதான் கடந்த காலத்தை நரகமாகச் சித்திரிக்கத் தூண்டுகிறது. இந்த சிந்தனைத் திருகலைச் சரி செய்யாமல் உருவாகும் எந்தவொரு படைப்பும் இந்து சமூகத்தின் அசல் பிரதிபலிப்பாக இருக்க வாய்ப்பில்லை.
இன்று இந்த முத்திரையை அழிப்பது சாத்தியமும் இல்லை.  அது நதியை எதிர்த்திசையில் பாய வைப்பதைப்போன்றது.  தலித், சூத்திர இண்டலெக்சுவல்களில் ஆரம்பித்து முற்போக்காளர்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய அறிவுஜீவிகள், நவீன/மேற்கத்திய மோஸ்தரில் திரியும் அக்ரஹாரத்து அம்பிகள்வரை அனைவருமே சாதிதான் உலகத்திலேயே கொடிய சமூக அமைப்பு என்றும் அதற்கு சாஸ்திர/இந்து மத அங்கீகாரம் உண்டென்றும் சொல்பவர்களாகவே இருக்கிறார்கள் (பிரிட்டிஷ் கிறிஸ்தவரும் ஐரோப்பிய கிறிஸ்தவரும் அமெரிக்க கிறிஸ்தவரும் என்ன செய்தாலும் அது அவர்களுடைய மதத்தின் தூண்டுதலாகப் பார்க்கப்படாது. அதை அவர்கள் வெளிப்படையாக அறிவித்த நிலையிலும். இந்து செய்பவை மட்டுமே இந்து மதத்தின் அங்கீகாரத்தால் செய்யப்படுபவையாக முத்திரை குத்தப்படும்.) போதாதகுறையாக கருத்தியலில் ஆரம்பித்து காசு இயல் வரை மேற்கத்திய பின்னூட்டமும் இதற்கு உண்டு. என்ன… இந்த சாதி அமைப்பால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் மக்களுக்கு மட்டும் இந்த உண்மைகள் தெரியாது! ஒரு கலைஞனின் காலடிகள் பட வேண்டிய உலகம் அதுவே.
சாதி அமைப்புக்கு அதில் பாதிக்கப்படும் மக்களிடமிருந்து எந்தப் பெரிய எதிர்ப்பும் வராமல் இருப்பதற்கு அது அவ்வளவு தந்திரமாக இருப்பதுதான் காரணம் என்ற ஒற்றை வாதத்தின் மூலம் தமது சிந்தனைக்கு எந்த பாதிப்பும் வராமல் முழங்கிக்கொண்டு வருகிறார்கள். இந்து சாதி அமைப்பை நிதானமாக அணுகும் ஜெயமோகன்கூட இந்த நாவலில் வெகுவாகத் தடம் புரண்டிருக்கிறார். ’பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்ட செயற்கைப் பஞ்சத்தில் லட்சக்கணக்கான தலித்கள் இறந்த நேரத்தில், அவர்கள் எல்லாம் செத்து ஒழிய வேண்டியவர்களே… அது அவர்களுடைய விதி, முன்வினைப் பயன். மேலும் பிராமணனாகிய தனக்கு சமமாக நின்று பேசிய குற்றத்துக்காக அவனுடைய சாதியினர் புழுக்களைப் போல் துடித்துச் சாகத்தான் வேண்டுமென்று’ முரஹரி ஐயங்கார் ஆவேசப்படுவதாக கதை புனையப்பட்டுள்ளது. இது ஏதோ தனி ஒரு நபரின் குரலாக அல்ல, ஒட்டு மொத்த இந்து சமூகமுமே அப்படியான மனநிலையில் இருந்து தலித்களைக் கைவிட்டதாகவே சொல்லப்படுகிறது. இத்தனைக்கும் முற்பிறவி, கர்ம வினைக் கோட்பாடு எல்லாம் பவுத்த சமணத்தின் ஆதாரக் கோட்பாடுகள்தான். பிராமணர் ஒருவர் அந்தக் கோட்பாட்டின் ஆன்மிக தளத்தைப் புரிந்துகொள்ளாமல், அதை சமூக ஏற்றத் தாழ்வுகளையும் பேரழிவுகளையும் நியாயப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டதாகக் குறிப்பிட்டிருப்பது மிகவும் தவறு. கிறிஸ்தவம் பற்றிப் பேசும்போது சர்ச்களின் அரசியலையும் உண்மையான கிறிஸ்தவ ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்த்து அவற்றுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை நாவலில் வழங்கியிருக்கும் ஜெயமோகன் இந்து மதத்தில் அரசியல் சக்திகள் மட்டுமே இருப்பதாகச் சித்திரித்திருப்பது ஏனென்றே தெரியவில்லை. முரஹரி ஐயங்காரின் கொடூரமான வாதத்துக்கு நிகராக ’வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வடினேன்’ என்ற இந்து ஆன்மிகக் குரலும் உரத்து ஒலித்த பூமிதானே இது. இந்த நாவலில் ஒரு கிறிஸ்தவ மத போதகர் பஞ்சத்தின் கொடுமையைக் கண்டு மனம் பொறுக்காமல் தன் கையில் இருக்கும் சொற்ப உணவை எடுத்துக்கொண்டு அவர்கள் மத்தியில் ஆவேசத்துடன் பாய்ந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் இது போன்ற பஞ்சத்தை மதம் மாற்றக்கிடைத்த நல்ல வாய்ப்பு என்றுதான் சர்ச் நினைத்திருக்கிறது. எனினும் அவர்களில் இருந்த எளிய அர்ப்பண உணர்வு கொண்ட பாதிரிகளை புனைவின் துணைகொண்டு உருவாக்கியிருக்கும் ஜெயமோகன், இந்து ஆன்மிக சக்தியை முற்றாகப் புறக்கணித்ததேன்? எதை எழுதுவது எதைவிடுவது என்பதெல்லாம் எழுத்தாளனின் புனைவு சுதந்திரத்துக்கு உட்பட்டது என்ற பதில் இந்த இடத்தில் செல்லுபடியாகாது. கிறிஸ்தவத்தில் இருக்கும் சொற்ப நல் மனசைத் தோண்டி எடுத்து பாலிஷ் போட்டுக் காட்டும் ஜெயமோகன் இந்துத்துவத்தின் பொற் குடத்தைக் கரி பூசி வீசி எறிவது கலை சுதந்தரம் அல்ல.
பஞ்ச காலத்திலும் தலித் மீதான இந்து சமூகத்தினரின் பெரு வெறுப்பே செயல்பட்டிருந்தது என்றால், தலித் சமூகம் அவர்களை அரவணைப்பதற்காகவே அலைந்து திரிந்த கிறிஸ்தவ பாதிரியார்களின் அங்கிக்குள் வெகு எளிதாக தஞ்சம் புகுந்துவிட்டிருக்குமே. அப்படியொன்று நடந்திருக்காத நிலையில் உண்மை வேறு என்னவாக இருந்திருக்கும் என்ற எளிய கேள்வி ஜெயமோகனுக்குக்கூட தோன்றாமல் போனது விசித்திரமே.
நாவலில் சொல்லப்படும் அதே பஞ்ச காலத்தில் அதே செங்கல்பட்டு சுற்றுவட்டாரங்களில் கோவிந்த ஐயர் என்பவர் மிகப்பெரிய அளவில் கஞ்சித் தொட்டி அமைத்து பசியால் வாடியவர்களுக்கு உணவளித்திருக்கிறார். ஆரம்பத்தில் சிறிய அளவில் ஆரம்பித்தவர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியதும் ஊர் ஊராகச் சென்று தானியங்களைக் கொள்முதல் செய்து ஏராளமானோருக்கு உணவிட்டிருக்கிறார்.
வாணியம்பாடி திருப்பத்தூர், சேலம்
மற்றும் மாமூர் குழியம் முதல்
வேளாவூரிலுள்ள ஆட்டக்காரரெல்லாம்
மேவி வந்ததைக் கேளுங்கடி
வடக்கிலுள்ள தாழ்ந்த சாதிகள்,
வகையுடன் கையில் சட்டிகளை
எடுத் தூரூராய் போய் கூழை
இரந்து குடிக்குறார் பாருங்கடி.
என்ற தாது வருடப் பஞ்சம் பற்றிய பாடல் தாழ்ந்த சாதிகள் இரந்து பிழைக்க நேர்ந்ததை மட்டுமல்ல அவர்களுக்கு கூழ் வார்க்க பலர் இருந்ததையும்தானே சொல்கின்றன. புழுங்கல் அரிசி சாப்பிடமாட்டேன் என்று சொன்னவர்களெல்லாம் அதைச் சாப்பிட்டாக வேண்டிய நெருக்கடி வந்ததாகவும் இன்னொரு இடத்தில் சொல்கிறது.
பஞ்சம் தாக்கிய பகுதிகளில் வட ஆர்க்காடு மாவட்டமும் ஒன்று. அம்மாவட்டத்தின் கிராமப்பகுதியிலிருந்து வந்த பட்டினிக் கூட்டத்தால் வேலூர் நகரமே திணறியது. பஞ்சம் தாக்கிய சேலம், கோவை, மதுரையைச் சேர்ந்த மக்கள், காவிரிப் படுகையை நோக்கிச் சென்றனர். 1876 அக்டோபர் முதல் மே மாதம் வரை தஞ்சை மற்றும் அதன் சுற்றுப்புறத்திலிருந்த 15 அன்னச் சத்திரங்களில் சுமார் 5 லட்சம் பேருக்கு இலவச உணவு அளிக்கப்பட்டதாக அம்மாவட்டத்தின் அன்றைய கலெக்டர் தாமஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
(இந்தத் தகவல்கள் தினமணிக் கதிரில் எஸ். சிவகுமார் எழுதிய கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் தகவல்கள். அது சொல்வனத்தில் மறு பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. http://solvanam.com/?p=31330)
வள்ளலாரும் இதே காலகட்டத்தில்தான் பசிப்பிணி போக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார். அவருடைய மார்க்கத்தில் அன்னதானம் மிக முக்கியமான இடத்தை எடுத்தற்கு பஞ்சத்தில் மக்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்து மனம் வாடியதுதான் முக்கிய காரணமாக இருந்திருக்கும். ஆன்மிக தத்துவ விசாரங்கள் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். முதலில் மனிதருக்கு அடிப்படைத்தேவை உணவு என்ற புரிதலுடன் இயங்கியவர் அவர்.  இன்று அன்னதானங்கள், விடிந்த பின்னும் எரியும் தெருவிளக்குகள் போல் தேவையற்றதாகி ஆகிவிட்டிருக்கின்றன. ஆனால், இருள் சூழ்ந்திருந்த ஒரு காலத்தில் வேண்டிய வெளிச்சத்தை அவையே தந்திருக்கின்றன. இவையெல்லாம் ஜெயமோகனின் கண்ணில் படாமல் போனது ஏன்?
இது தொடர்பான கேள்விகள் நூலின் விமர்சனமாக முன்வைக்கப்பட்டபோது இந்து சக்திகளின் இப்படியான நல்லெண்ண முயற்சிகள் எல்லாம் மிகவும் சொற்பமானவை என்று புறங்கையால் ஒதுக்கிவிடுகிறார் ஜெயமோகன்.  பிரிட்டிஷ் கால இந்தியா பற்றிய கிறிஸ்தவ சார்பு ஆவணங்களே நமக்குக் கிடைத்திருக்கும் நிலையில் இந்து சக்திகள் செய்த நல்ல செயல்கள் எல்லாம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு என்ற எளிய உண்மைகூட மிகப் பெரிய புனைவெழுச்சியைத் தரவல்லதுதான்.
***
கடந்த கால சமூகத்தினர் இயற்கைப் பஞ்சங்களில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள சில வழிமுறைகளைப் பின்பற்றிவந்ததுண்டு. கூண்டோடு இடம் பெயர்வது ஒரு வழிமுறை. அந்த கிராமத்துக்குச் சென்று பார்த்தால் யாருமே இருக்கமாட்டார்கள். அனைவரையும் பஞ்சத்தால் இறந்தவர்களாக பிரிட்டிஷார் கணக்கில் வைத்துகொள்வார்கள். ஆனால், அந்த மக்களோ ஓரளவுக்கு வசதியான இடத்துக்கு இடம்பெயர்ந்துவிட்டு மழை பொழிய ஆரம்பித்ததும் ஊர் திரும்பிவிடுவார்கள். அந்தவகையில் இந்திய பஞ்சம் தொடர்பாகச் சொல்லப்படும் புள்ளிவிவரங்கள் ஒருவகையில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டவையே. மேலும் பஞ்ச காலங்களில் கஞ்சித்தொட்டி அமைத்தல், வெள்ளக்காலங்களில் கோயில்களில் தங்க இடம் தருதல் என நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. மேல் சாதி நில உடைமையாளர்கள் குத்தகைக்கு நிலத்தைக் கொடுத்திருக்கும்போது பஞ்ச காலங்களில் (பூ கருகிப் போகும்போது) குத்தகைக் கூலியை ரத்து செய்வதுண்டு.  எனவே, சாதி இந்துக்கள் அப்படி ஒன்றும் அரக்கர்கள் அல்ல.
தொலைநோக்குப் பார்வை இல்லாதது, சேமிப்பில் ஈடுபடாதது, அன்றைய தேவைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு வாழ்க்கையைக் கொண்டாட்டமாக வாழ்வது போன்ற வாழ்க்கை முறையினால் பஞ்சம், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களில் முதன்முதலில் பாதிக்கப்படும் சமூகமாக தலித் சமூகம் இருந்துவந்திருக்கிறது. அவர்களுடைய அசுத்தமான வாழ்விடம் நோய்களைப் பெருக்கிப் பேரழிவை கொண்டுவந்திருக்கிறது. இந்த அம்சங்கள் எதுவும் தலித்துகளைக் குறைகூறும் நோக்கில் அல்லாமல், நடைமுறை யதார்த்தம் என்ற வகையில்கூட நாவலில் இடம்பெறவில்லை. இவைகூடப் பெரிய பிழையாகத் தெரியவில்லை. ஆனால், பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சங்களின்போது நடக்கும் கொடுமைகளுக்கும் இந்து சாதி சமூகமே காரணம் என்பது ’பீட்டிங் ஃபேவரைட் விப்பிங் பாய்’ கதைதான்.  அந்த செயற்கைப் பஞ்சங்களின்போது இந்து மேல் சாதியினர் கூடுதல் உதவிகளைச் செய்து கொடுத்திருக்கவேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், அவர்கள் செய்த உதவிகள் எல்லாம் புனைவெழுச்சிக்குத் தோதுப்படாது என்பதால் முற்றாகப் புறமொதுக்கப்படுவது தவறு. பிரதான குற்றவாளிகளான பிரிட்டிஷாரின் கொடுமைகளை எல்லாம் வார்த்தைகளாக நிரப்பிவிட்டு மேல் ஜாதிக் கொடுமையைமட்டும் அழுத்தமான காட்சியாகச் சித்திரித்திருப்பது மிகவும் அபாயகரமான அரசியலே. அவதூறுகளை கொட்டை எழுத்தில் முதல் பக்கத்தில் பிரசுரித்துவிட்டு, வருத்தத்தை கண்ணுக்குத்தெரியாத ஓர் மூலையில் இடம்பெறச் செய்யும் வணிகப் பத்திரிகை தந்திரமே அது.
நாவலில் கூறப்படும் பனிக்கட்டி உண்மையில் எந்த அளவு பெரிதாக இருந்ததோ அது புனைவெழுச்சிக்குப் போதுமானதாக இருந்திருக்கவில்லை என்பதால் அதை பூதாகரமாக ஒரு யானைபோல் பல மடங்கு ஊதிப் பெருக்கிக் கொண்டதாக ஜெயமோகனே கூறியிருக்கிறார். அவர் சொல்லாமல் விட்ட விஷயம் என்னவென்றால், பஞ்சத்தின் இழப்பையும் மேல் சாதி இந்துக்களின் குற்றத்தையும் அதேவிகிதத்தில் மிகைப்படுத்திவிட்டிருக்கிறார். அந்தவகையில் தாது வருடப் பஞ்சத்தில் தலித்கள் பட்ட வேதனையைவிட வெள்ளையானையில் அவர்கள் படும் வேதனை வெகு அதிகமாக இருக்கிறது. பாவம் அந்த துராத்மாக்கள்.
பஞ்ச காலம் என்பது ஒரு சமூகத்தின் அனைத்து அமைப்புகளையும் நிலைகுலைய வைக்கும் தன்மை கொண்டது. உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அனைத்து மனித உறவுகளும் சிதையத்தான் செய்யும்.  உறவினர்களுக்குக்கூட கொடுக்காமல் பதுக்கி வைக்கும்படிச் செய்யும்.  நோய்கள் பெருகி இறப்புகள் அதிகரிக்கும். முந்தைய சிகிச்சை மையங்களால் இதைக் கையாள முடியாமல் போய்விடும். தலித்கள் மட்டுமல்ல சாதி இந்துக்களும் செத்து மடிந்திருப்பார்கள். தலித்களிலும் பொருளதார வசதி படைத்த அல்லது பொருளாதார வசதிபடைத்தவர்களிடம் பணி புரியும் தலித்கள் இந்தப் பஞ்சத்தால் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கமாட்டார்கள். சாதி இந்துக்களில் ஏழைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பார்கள். செயற்கைப் பஞ்சத்திலும் பொருளாதாரத் தாக்கமே அதிகமாக இருக்கும்.
ஒரு சமூகம் இயற்கைப் பேரிடர்களுக்குப் பழக்கப்பட்டு சில நிவாரண வழிகளைக் கண்டடைந்திருக்கும். செயற்கைப் பஞ்சம் என்பது அதற்குப் பழக்கமில்லாததாக இருக்கும். அந்த சமூகத்தின் ஆக்கபூர்வ சக்திகளின் முயற்சிகள் போதுமானதாக இருந்திருக்காது. தகவல் தொடர்பும், போக்குவரத்து வசதிகளும் இருந்திராத ஒரு காலகட்டத்தில் அந்த சக்திகள் தமது பலத்தை ஒருங்கிணைக்க முடிந்திருக்காது. இவையெல்லாவற்றையும் சேர்த்துத்தான் ஒரு முடிவுக்கு நீங்கள் வரவேண்டியிருக்கும்.
பொதுவாக ஜெயமோகன் தனது எழுத்து தன்னை மீறிய ஓர் உன்மத்த நிலையில் நிகழ்வதாகச் சொல்வார். எந்தவொரு படைப்பையும் தானாக எழுதுவதில்லை. அதுவே தன் வழியாக எழுதப்படுகிறது என்றும் சொல்வார். விஷ்ணுபுரம் நாவலில்கூட தான் விரும்பியிராத வகையில் நாத்திக அம்சம் தூக்கலாக வெளிப்பட்டுவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். அவரைப் பொறுத்தவரையில் கலை மனமானது கட்டுகளை அறுத்தெறிந்து காட்டில் சீறிப் பாயும் குதிரையைப் போன்றது. ஆனால், இந்த நாவலில் அப்படியான எந்தப் பாய்ச்சலும் நிகழவில்லை. மிகவும் திட்டமிட்டபடியே முன் தீர்மானங்களுக்கு ஏற்பவே நாவல் முழுவதும் எழுதப்பட்டிருக்கிறது. பதிப்பாளருக்கு உவப்பில்லாத ஒற்றை வரி கூட இந்த நாவலில் இடம்பெறவில்லை. இந்து ஆன்மிக மரபும் சாதி அமைப்பின் சாதகமான அம்சங்களும் முற்றாக இந்த நாவலில் இருந்து முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கிறது (ஜெயமோகனின் ஆளுமையை மனதில் கொண்டு சொல்வதென்றால், பதிப்பாளர் சொல்லி இப்படிச் செய்திருக்கமாட்டார். தானாகவே அந்த விலங்கை தனக்குப் பூட்டிக்கொண்டிருப்பார்.)
***
ஏய்டன் என்ற அயர்லாந்து விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் பிரிட்டிஷ் அரசுப் பிரதிநிதியாக மதராஸ பட்டணம் வந்துசேருகிறான். ஒருநாள் அவன் தன் குதிரையில் கடற்கரைச்சாலையில் செல்லும்போது நீலமேகம் என்னும் கங்காணி இருவரைச் சாட்டையால் அடிப்பதைப் பார்க்கிறான். அடிவாங்கும் இருவரும் கணவன் மனைவி என்பதும் பக்கத்தில் இருக்கும் ஐஸ் ஃபேக்டரியில் பணிபுரிபவர்கள் என்பதும் தெரியவருகிறது. மேதகு மகாராணியாரின் ஆட்சியில் பணியாளர்களை இப்படிச் சாட்டையால் எல்லாம் அடிக்கக்கூடாது என்று தடுக்கிறான். அலுவலகத்துக்குத் திரும்பி தன்னுடைய படையை அழைத்துச் சென்று நீலமேகத்தைக் கைது செய்யப் போகிறான்.  அந்த ஐஸ் ஃபேக்டரி அமெரிக்கர்களுக்குச் சொந்தமானது. அதன் இயக்குநர் ஃபார்மர் தனது கங்காணிகள் அப்படி நடந்துகொள்ளமாட்டார்கள், நல்லவர்கள் என்று சொல்கிறார். ஏய்டன் ஃபேக்டரிக்குள் சென்று பார்க்கிறான். ஐஸ்கட்டிகள் வெள்ளை யானைபோல் பிரமாண்டமாக இருக்கின்றன. அந்தப் பணிச்சூழல் படு மோசமாக இருக்கிறது. அடிக்கப்பட்ட இரண்டு தொழிலாளர்களும் அங்கு இல்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதும் தெரியவில்லை.
இதனிடையில் காத்தவராயன் என்ற தலித் பிரதிநிதி ஒருவனை ஏய்டன் சந்திக்கிறான். அவனும் சாட்டையாலடிக்கப்பட்ட அந்தத் தொழிலாளர்களைத் தேடித்தான் அங்கு வந்திருக்கிறான். அந்த இருவருக்கும் மருத்துவ உதவி செய்து தரும்படி ஒரு ஆஸ்திரியப் பாதிரியாரிடம் இருந்து கடிதம் வாங்கி ஃபார்மரிடம் கொடுக்கச் சொல்லி ஆலோசனை சொல்லியிருந்தான். அவர்களுக்கு என்ன ஆனது என்று தேடி வருகையில்தான் ஏய்டனைச் சந்திக்கிறான். அவன் மூலமாக தலித்களின் நிராதரவான நிலை ஏய்டனுக்குத் தெரியவருகிறது. நாட்டில் செயற்கைப்பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. பிரிட்டிஷார் இந்திய விளை நிலங்களில் தமது பணப்பயிர்களை நட்டு வளர்த்ததன் மூலமும் அதிக வரி விதித்ததன் மூலமும் அயல்நாடுகளில் இருக்கும் பிரிட்டிஷ் படைவீரரர்களுக்காக ஏற்றுமதியை அதிகரித்ததன் மூலமும் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கியிருக்கிறார்கள். . தலித் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து விழுகிறார்கள்.
இதைப் பார்த்து மனம் வருந்தும் ஏய்டன் ட்யூக்கிடம் பஞ்சம் தொடர்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்து தலித்களுக்கு ஏதேனும் நல்லது செய்யலாம் என்று நினைக்கிறான். முதல்கட்டமாக ஐஸ் ஹவுஸில் பணி புரிந்து காணாமல் போன இருவரைக் கண்டுபிடித்து, ஒருவேளை அவர்கள் கொல்லப்பட்டிருந்தால் நீலமேகத்துக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும். ஐஸ் ஹவுஸ் பணிச் சூழலை மேம்படுத்தவேண்டும் என்று முயற்சி செய்கிறான். காத்தவராயனின் வழிகாட்டலில் ஐஸ் ஹவுஸ் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்தியாவில் நடந்த முதல் வேலைநிறுத்தம்.
அவர்களுடைய கோரிக்கைகளுக்கு முதலில் மறுப்புத் தெரிவிக்கும் அமெரிக்கரான ஃபார்மரும் பின்னர் அந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறார். ஏய்டனும் காத்தவராயனிடம் விஷயத்தை எடுத்துச்சொல்லி வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக் கொள்ளச் சொல்கிறான். ஆனால், அந்த நிறுவனத்தின் நிதி ஆலோசகரான முரஹரி ஐயங்கார் தலித்கள் மீது கடுமையான வெறுப்பு உடையவர்.  ’தலித்துகள் எல்லாம் செத்து ஒழிய வேண்டியவர்களே. அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டத் தேவையில்லை. அவர்கள் முற் பிறவியில் செய்த தீவினைகளின் பலனாகத்தான் இழிவான வாழ்க்கை அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. அதுவும் அதிகாரத்தை எதிர்க்கும் அளவுக்குத் துணிந்துவிட்ட தலித்துகளை அடியோடு ஒழித்தாகவேண்டும்’ என்று ஆவேசப்படுகிறார். அவரை மீறி அமெரிக்கரான ஃபார்மராலும் பிரிட்டிஷ் பிரதிநிதியான ஏய்டனாலும் எதுவும் செய்ய முடியாமல் போய்விடுகிறது. வேறு வழியின்றி கோரிக்கைகள் நிறைவேறாமலேயே வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. காத்தவராயன் சென்று மக்களிடையே பேசுகிறான். ஆனால், போராடத் தொடங்கிவிட்ட மக்களோ பின்வாங்க மறுக்கிறார்கள்.
முரஹரி ஐயங்கார் வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு செல்லும்படி கூட்டத்தைப் பார்த்து மிரட்டுகிறார். வேலை நிறுத்தம் நடக்கும் ஃபேக்டரிக்கு பாதுகாவலுக்கு வந்த ஏய்டனின் படையினர் கூட்டம் கலையாமல் இருப்பதைப் பார்த்ததும் ஆவேசப்படுகின்றனர்.  தாக்குதலுக்கான உத்தரவை ஏய்டன் தன்னையறியாமல் தந்துவிடுகிறான். குதிரைப்படை மூர்க்கத்தனமாக போராட்டக்காரர்களை அடித்து துவம்சம் செய்கிறது.  கூட்டுக் கலவியை ரசிப்பதைப்போல் முரஹரி ஐயங்கார் அந்தப் படுகொலையை ரசிக்கிறார்.  ஏய்டனோ குற்ற உணர்ச்சியினால் தன்னைத்தானே சுட்டுக் கொன்று தற்கொலை செய்யவும் முனைகிறான். ஆனால், அதிர்ஷ்டவசமாகப் பிழைத்துவிடுகிறான்.
இதனிடையில் இந்து சாதி அமைப்பின் கோர முகத்தை முரஹரி ஐயங்காரின் வடிவில் கண்டுகொண்ட காத்தவராயன் புத்த மதத்துக்கு மாறுகிறார். எய்டன் தனது செயலுக்குப் பிராய்ச்சித்தமாக ஐஸ் ஹவுஸ் போராட்டத்தைப் பற்றியும் பஞ்சத்தின் கோர தாண்டவத்தையும் நெஞ்சுருக எழுதி ட்யூகிடம் தருகிறான். ஐஸ் ஹவுஸ் ஃபேக்டரியில் இருக்கும் நீல மேகத்தையும் அவரைப் போன்ற கங்காணிகளையும் கைது செய்ய அனுமதி கேட்கிறான். அவரோ அதை விரும்பவில்லை. எனவே, ஏய்டனை அங்கிருந்து அகற்ற விரும்புகிறார். அவனுக்கு பதவி உயர்வு கொடுத்து வேறு ஊருக்கு அனுப்பிவிடுகிறார். அவன் அனுப்பிய பஞ்சம் தொடர்பான அறிக்கையைப் பயன்படுத்தி மக்களுடைய துயரைத் துடைக்க நலத்திட்டங்கள் தொடங்குகிறேன் என்ற போர்வையில் பெரும் தொகையைச் சுருட்டத் திட்டமிடுகிறார். நடக்கும் நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்ள என்று தெரியாமல் தவிக்கும் ஏய்டன் பதவி உயர்வை ஏற்றுக்கொண்டு அதிகார எந்திரத்தின் ஓர் கண்ணியாகத் தன்னை பெரும் வேதனையுடன் இணைத்துக்கொள்வதோடு நாவல் முடிகிறது.
***
இந்து சாதிய அமைப்பு குறைகள் உடையதுதான். விமர்சிக்க வேண்டியதுதான். உலகில் தோன்றிய குழு அடையாளங்களில் இன வெறி, நிற வெறி, மதவெறி, மொழி வெறி போல எல்லாம் சாதி வெறி கொடூரமானது இல்லை என்ற போதிலும் அதுவும் ஒருவகை வெறியாகவே வெளிப்பட்டிருக்கிறது, வெளிப்பட்டுவருகிறது என்பது உண்மைதான். அதிலும் அதனால் பாதிக்கப்பட்ட தலித் பிரிவினருக்கு உலக வரலாற்றில் சாதி வெறி எந்த இடத்தில் இருக்கிறது என்ற ஒப்பீடெல்லாம் இல்லாமல் தம்மளவில் அதை முழு மூச்சுடன் எதிர்க்க எல்லா நியாயமும் உண்டு.  அத்தகைய தலித் பிரதிநிதி ஒருவரை அல்லது அப்படியான நிகழ்வை கதையின் மையமாகக் கொண்டுவிட்டிருக்கும் நிலையில் அந்த அரசியல் பார்வையே நாவலில் பிரதானமாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், கலைஞனுடைய வேலை அரசியல் பிரசாரக் கையேடு எழுதித் தருவதல்ல.  புனைவுச் சுதந்தரம் என்பது வரலாற்றின் இடைவெளிகளை நிரப்புவதாக இருக்கவேண்டுமே தவிர திரிப்பதாக இருக்கக்கூடாது.  வரலாற்றில் பொய்யாகப் புனைந்திருக்கும் ஒன்றை தோலுரித்துக் காட்டலாம். ஜோதியில் ஐக்கியமானார் என்று ஆதிக்க சக்தி வரலாறு புனைந்திருந்தால் தீ வைத்துக் கொளுத்திவிட்டார்கள் என்று அதைக் கட்டுடைக்கலாம். அங்கு நீங்கள் உண்மை வடிவில் இருக்கும் ஒரு பொய்யை அம்பலப்படுத்துகிறீர்கள். ஆனால், பஞ்ச காலத்தில் இந்து சாதி அமைப்பு தன்னால் முடிந்த நிவாரணப்பணிகளை எடுத்திருக்கும் நிலையில் அது தலித்களை முற்றாகப் புறக்கணித்துவிட்டது என்று அடிவயிற்றில் இருந்து அறக்கூச்சல் போடுவது நியாயமே அல்ல.
எந்தவொரு சமூகமும் பஞ்சம், வெள்ளம் போன்ற நேரங்களில் தடுமாறத்தான் செய்யும் என்ற நடைமுறை யதார்த்தத்தை ஒற்றை வரியில் சாதுரியமாகக் கடந்து சென்றிருக்கிறார். அந்தப் புள்ளி இன்னும் விரிவடைந்திருக்கவேண்டும். அதோடு, ஒரு சமூகத்தின் அற உணர்வு பற்றிப் பேசுவன்றால் அதன் இயல்பான காலத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது, நெருக்கடி காலங்களில் எப்படி மாறுகிறது என்பதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒட்டுமொத்த சித்திரத்தை உருவாக்கவேண்டும். ஒருவனுடைய குரலின் இனிமை அல்லது இனிமையின்மை பற்றிப் பேசுவதென்றால் அவருடைய கழுத்து நெரிக்கப்பட்ட நேரத்தில் அது எப்படி இருக்கிறது என்பதை வைத்தா மதிப்பிடுவது? வரலாற்றில் அணையாமல் கிடக்கும் அனலின் மீது நமது வெட்டிதர்க்கங்களைப் போட்டு மூடக்கூடாதுதான். அதேநேரம் புனைவின் நெய்யை ஊற்றி அதைக் கிளர்ந்தெழச் செய்யவும் கூடாதல்லவா? அரசியல் பிழைத்தோர்க்கு மட்டுமல்ல அறம் பிழைத்தோர்க்கும் அறமே கூற்றாகும்.
பஞ்ச காலம் என்பது ஆதிக்க சக்திகளைக் குற்றவாளைக்கூண்டில் நிறுத்தி அறச்சீற்றத்தோடு கேள்வி கேட்க வேண்டிய காலகட்டம் அல்ல.  ஒரு மனிதனின் முகத்தில் பேய் அறைவதுபோன்ற ஒரு நிகழ்வு அது.  அவனுடைய அனைத்துப் புலன்களும் கலங்கி நிற்கும் தருணம் அது.  பஞ்ச காலகட்டத்தின் ஆன்மா என்பது மனித இனம் நிராதரவாகக் கைவிடப்படும் காலகட்டம். மனித உணர்வுகள் அத்தகைய காலகட்டத்தில் எப்படி சுயநலம் மிகுந்ததாக, மிருக நிலைக்குப் போய்விடுகிறது என்பதைக் கனக்கும் இதயத்தோடு சொல்லவேண்டிய காலகட்டம்.   இன்னொருவகையில் பார்த்தால் அதே நெருக்கடிதான் சிலரைப் பொது நலன் நோக்கி இழுக்கவும் செய்யும்.  ஒற்றைப் படை அரசியல் முழக்கங்கள் எல்லாம் கலைப்படைப்புக்கு உகந்தவை அல்ல. அது ஊரில் சுட்டெரிக்கும் சூரியன் மட்டுமே இருந்தது நிலவே இல்லை என்று சொல்வதைப் போன்றதுதான்.
அதோடு, இந்தியாவைப் பொறுத்தவரை தாது பஞ்ச காலகட்டம் என்பது மன்னராட்சியின் நல்ல அம்சங்கள் எல்லாம் சிதைக்கப்பட்டு மக்களாட்சியின் நல்ல அம்சங்கள் எதுவும் வேரூன்ற ஆரம்பித்திராத காலகட்டம் (பிரிட்டிஷாரின் ஆட்சி காலம் முழுவதுமே அப்படியானதுதான்). எனவே அந்தவகையிலும் அது துரதிஷ்டவசமான காலகட்டமே. அதே காலகட்டத்தில்கூட பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக இருந்திராத சம்ஸ்தானங்களில் பஞ்ச நிவாரணப் பணிகள் மன்னர்களால் திறம்பட மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஒருவர் பார்க்க முடியும். சூரியன் முழுவதுமாக மறைந்து நிலவு முளைப்பதற்கு முந்தைய கட்டத்தில் நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் புறந்தள்ளிப் பார்த்தால் வானம் பெரிதும் இருண்டே காணப்படும். ஆனால், அந்த இருள் அந்த வானின் நிரந்தர நிறமல்ல.
ஹிட்லரிய வதைமுகாம் போன்ற கொடுஞ்செயல்கள் சரித்திரத்தில் நிகழும் போதுதான் ஆதிக்க சக்தியை முழுவதுமாகக் குற்றவாளிக்கூண்டில் ஏற்ற முடியும். அந்த பேரழிவில்கூட மனிதாபிமானத்துடன் செயல்பட்ட ஆஷ்கார் சிண்ட்லரைத் தேடிக்கண்டுபிடித்து முன்வைப்பதுதான் மேற்கத்திய கலையின் அரசியல்.  இந்தியாவைப் பொறுத்தவரையில் எதற்கெடுத்தாலும் இந்து சக்திகளைக் குற்றம் சாட்டுவதும் அதே மேற்கத்திய நாணயத்தின் மறுபக்கமே. ஜெயமோகனும் அந்த நாணயத்தைப் பட்டை தீட்டித் தரும் ஒருவராகப் போனது வரலாற்றின் முரண் நகையே.  அஞ்ஞாடியில் பூமணி இதே தாது வருடப் பஞ்சம் பற்றி எழுதியிருப்பதாகச் சொன்னார்கள்.  உண்மை நிலையை அவராவது தொட்டுக்காட்டியிருக்கிறாரா என்று பார்க்கவேண்டும்.
ஜாலியன் வாலாபாக் படுகொலையில் கூட சுட்டு வீழ்த்தியவர்கள் அனைவருமே இந்தியர்கள்தான். அதோடு துப்பாக்கிக்கு இரையானவர்களுக்கு இணையாக உயிர் பயத்தில் ஓடியதில் கூட்ட நெரிசலில் மிதிபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கும். அவர்களையெல்லாம் அந்த மக்களே கொன்றுவிட்டதாகச் சொல்லி அறச்சீற்றக் கேள்விகளை ஒருவர் முன்வைத்தால் அது எவ்வளவு பிழையானதாக இருக்குமோ அந்த அளவுக்கு இல்லையென்றாலும் இந்த நாவலும் ஓரளவுக்கு அந்த திசையிலேயே பயணிக்கிறது.
நாவலின் அரசியல் அம்சத்தை விட்டுவிட்டு கலை மதிப்பைப் பாத்தால் இந்த நாவல் அவருடைய முந்தை நாவல்களின் கலை நேர்த்தியையும் அமைதியையும் இழந்து நிற்பதாகவேபடுகிறது. ஜெயமோகன் ஓர் எழுத்தாளர் என்பதால், நாயகனும் எழுத்தாற்றல் கொண்டவனாகவே நாவலில் வருகிறான். மேலும் அவனுடைய இந்தக் கலைத்திறமைக்கு நியாயம் கற்பிக்கும்வகையில் அவன் ஷெல்லியின் தீவிர காதலனாக முன்வைக்கப்படுகிறான். இவையெல்லாம் கொஞ்சம் செயற்கையாகவே இந்த நாவலில் இடம்பெற்றிருக்கின்றன.  அந்த எழுத்தளனும் கவித்துவ வார்த்தை ஜாலங்களில் ஈடுபாடு உடையவனாகவே இருப்பதால், பஞ்சம் பற்றிய விவரங்கள் எல்லாம் அவனுக்கு வெறும் ஓர் அறிக்கை போல, புள்ளிவிவரம் போலவே படுகிறது. நாவலிலேயே இது குறிப்பிடவும்படுகிறது. ஆனால், ஜெயமோகனுக்குகூட இந்த பஞ்ச நிகழ்வுகளானது ஓர் அபாரமான கதைக்களமாகவே பட்டிருக்கிறது என்பதே இந்த ஆர்ப்பாட்டமான நடையினால் தெரியவருகிறது.
இந்த நாவலில் இரண்டு விஷயங்கள் பிரதானமாகப் பேசப்படுகின்றன. ஒன்று பஞ்ச காலக் கொடுமைகள், இன்னொன்று முதல் தொழிற் சங்கப் போர். ஐஸ் ஹவுஸில் நடக்கும் தொழிலாளர் எழுச்சியை அதன் நிதி ஆலோசகரான முரஹரி ஐயங்கார் மிக மூர்க்கமாக அடக்குகிறார். பிரிட்டிஷ், அமெரிக்க பிரதிநிதிகள் எதுவும் செய்ய முடியாமல் உறைந்து நிற்கிறார்கள். இதோடு நிறுத்தாமல் அந்த முரஹரி ஐய்யங்கார் மீதே பஞ்ச கால வெறுப்பும் குவியவேண்டுமென்பதற்காக அந்த நிகழ்வுகள் குறித்த அவருடைய விட்டேத்தியான படு மோசமான கருத்தையும் நாவலில் வலிந்து செருகுகிறார். அதைவிட காத்தவராயனென்னும் தலித் கதாபாத்திரம் தலித்களின் வேதனைகளுக்கு வருந்துவதைவிட எட்டி உதைக்கும் பிரிட்டிஷ் காலணிகளுக்கு நாவால் பாலிஷ் போடுவதையே பிரதான குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார்.
இந்த நாவல் திட்டமிட்டு எழுதப்பட்டது என்ற விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது எல்லா கலைப்படைப்புகளுக்குமே திட்டமிடல் உண்டு என்று நியாயப்படுத்தியிருக்கிறார் ஜெயமோகன். ஆனால், விஷயம் என்னவென்றால் அந்தத் திட்டமிடல் கலை சார்ந்ததா அரசியல் சார்ததா என்பதுதான் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயம்.
அரசியல் முன் தீர்மானத்துக்கு உவப்பில்லாத தரவுகள் அனைத்துமே இந்த நாவலில் வடிகட்டப்பட்டிருக்கின்றன.  காலமெல்லாம் கஞ்சனாக, சாதி வெறி பிடித்தவராக இருந்த ஒருவர் பஞ்ச காலத்தில் மக்கள் பட்டினியால் வாடுவதைக் கண்டதும் மனமிளகி தன் சேமிப்புக் கிடங்கில் பதுக்கி வைத்திருக்கும் உணவை மக்களுக்கு எடுத்துக்கொடுப்பதாகவும் கதை புனையப்பட முடியும்.  இதுபோன்ற புனைவுகளை இந்தக் கதையில் ஜெயமோகன் எழுதாமல் இருந்ததற்கு அவருடைய அரசியல் திட்டமிடலே காரணமாக இருந்திருக்கிறது. அதுதான் இந்த நாவலை கலை மதிப்பில் கீழிறக்குகிறது.  பதிப்பாளர்களுக்கும் தலித் விமர்க்சகர்களுக்கும் உவப்பான வரலாற்றை எழுதத் தீர்மானித்த ஜெயமோகன் நாலைந்து தலித் எளிய மக்களையும் கண்டு பேசி இந்த நாவலை உருவாக்கியிருந்தால் இந்த நாவல் அரசியல் உண்மையோடு முடங்காமல் உண்மையான உண்மைக்கு அருகில் செல்ல முடிந்திருக்கும்.
தலித்களின் வேதனையைக் கூறும் இந்த நாவல் உண்மையில் ஒரு தலித்தின் பார்வையில் விரிவடைந்திருக்கவேண்டும். அந்தக் காலகட்டத்து தலித்களின் பேச்சு வழக்கு தெரியாது என்பதால் ஏய்டனின் பார்வையில் நாவலை உருவாக்கியதாக ஜெயமோகன் கூறியிருக்கிறார். உண்மையில் பேச்சு மொழிக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கத் தேவையில்லை. அல்லது பொது உரைநடைமொழியில் எழுதிவிட்டு கதை நிகழும் பகுதியில் வாழும் தலித்களின் பேச்சை அடிப்படையாக வைத்து கொஞ்சம் பின்னோக்கிப் போய் ஒரு மொழிநடையை உருவாக்கிக் கொண்டிருக்க முடியும். தலித்களின் பார்வை என்பது இந்த பேரழிவில் சாதி இந்துக்களைக் குற்றம் சாட்டுவதாக இருந்திருக்காது என்று நினைத்தோ என்னமோ அதற்குத் தோதான மேற்கத்திய பார்வையில் நாவலை கொண்டுசென்றிருக்கிறார்.  வேறு நபர்களின் வழிகாட்டுதலின் பேரிலும் பார்வையிலும் விரிவடைந்திருப்பதற்குப் பதிலாக அந்த எளிய மக்களின் பார்வையில் உருக்கொண்டிருக்கலாம். அந்த பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட யாரும் இன்று உயிருடன் இருக்க வாய்பில்லை. என்றாலும் வேறு பேரழிவுகளை அவர்கள் எப்படி எதிர்கொண்டிருக்கிறார்கள் என்பதில் இருந்து இந்த நாவல் கிளை பிரிந்திருக்கலாம். . தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாதி இந்துக்கள் மீது அப்போதும் கோபம் கொள்ளாமல் விசுவாசத்துடன் இருக்கும் ஒரு தலித் முன்வைக்கும் விமர்சனத்தைவிடவா அரசியல் பார்வைகொண்ட தலித் பேசிவிடப்போகிறான். வெறுப்பு சக்திகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட அரசியல் தலித் பேசும் பேச்சைவிட எளிய தலித்தின் விசுவாசம் அல்லவா ஆதிக்க சக்திகளை ஒரு கணம் தடுமாறச் செய்யும்.
மரண தண்டனை விதிக்கும் நீதிபதி தன் பேனா முனையை உடைத்துப் போடுவதுபோல் இந்த விமர்சனம் எழுதிய விசைப்பலகையை உடைத்துப் போடுகிறேன்.  இப்படியொரு விமர்சனம் எழுதும் நிலை எனக்கு இனி வாராதிருக்கட்டும்.
-பி.ஆர். மகாதேவன்