Tuesday, July 8, 2014

வெள்ளையானை நிர்மால்யா

 ஜெயமோகன்,

வணக்கம். நலம். உங்கள் புதிய நாவல் வெள்ளை யானை கிடைத்தது. நண்பர் வே.. அலெக்ஸ் அனுப்பி தந்திருந்தார். இரண்டு அமர்வுகளாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். தங்கள் அறம் தொகுப்புக்குப் பிறகு வாசிப்பின் பேரனுபவத்தைத் தந்த நாவல் அது. கவிதையுணர்வும் மனிதநேயமும் தீமைக்கெதிராகப் பொங்கியெழும் போர்க்குணமும் இரக்கமும் கருணையும் கொண்ட அயர்லாந்துக்காரனான எய்டன் என்னும் ராணுவ அதிகாரியின் பார்வையில் விரிகிறது, மறைக்கப்பட்ட சென்னையின் வரலாறு. அவனது மனவோட்டத்தைச் சார்ந்து நாவலின் சித்திரமும் தீட்டப்பட்டுள்ளது.
மதராசப் பட்டினத்தில் தலித்துகளால் நடத்தப்பட்ட முதல் தொழிற்சங்க போராட்டமான ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்களின் உரிமைக்குரலும், அக்காலகட்டத்தில் நிலவிய பெரும் பஞ்சமும், நாவலின் மைய ஓட்டமாக உள்ளன. சிறு ஊற்றுக்கண்ணாய் புறப்படும் நாவல் எய்டன் ஐஸ் ஹவுஸ் நிகழ்வுகளை எதிர்கொள்ளத் தொடங்கும் போது பிரவாகமெடுக்கிறது. ஐஸ்ஹவுஸ் விவகாரத்தைக் குறித்து ஆளுநருக்குக் கடிதம் எழுதிவிட்டு, வண்டியோட்டி ஜோசப்புடன் சாத்தானின் அரங்கமான பஞ்சத்தின் காட்சிகளைப் பார்வையிடுகிறான் எய்டன். பஞ்சப் பகுதிகளின் சித்தரிப்புகளை உங்களுக்கே உரிய அசாத்தியமான மொழியால் புனைவின் உச்சபட்ச எல்லைகளைத் தொட்டிருக்கிறீர்கள். பொது வாசக மனம் ஜீரணிக்க மறுக்கும் அதிதீவிரத்துடன் பஞ்சத்தின் குரூரம் தீட்டப்பட்டுள்ளது.
மரிஸôவுக்கும் எய்டனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் தத்துவச் சிந்தனையாளனின் ஆழமான அனுபவங்களை உள்ளடக்கியவை.
’பஞ்சத்தின் மூலம் தனக்கு ஆள்சேர்க்கும் கடவுள் கடவுள் அல்ல, சாத்தான்’
‘மக்களை மனதார வெறுக்காமல் ஒருவன் அவர்களை ஆட்சி செய்ய முடியாது’
தலித்துகள் மீது தாக்குதல் நடக்கும் வேளையில் முரஹரி அய்யங்காரின் பரவசத்தைக் குறிப்பிடும் போது
‘அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப் பிணையும் ஒரு காமக்காளியாட்டம் நடந்தால் அதைப் பார்க்கும் முகம் அப்படித்தான் இருக்கும்’
இதுபோன்ற பன்முக ஞானத்தின் வெளிப்பாடுகள் நாவலின் ஆரம்பம் முதல் இறுதி வரை பக்கத்திற்குப் பக்கம் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிவிடும் இத்தகைய வரிகள் வாசகனை நாவலை விட்டு வெளியேறி விடாமல் நிறுத்துகின்றன. நிகழ்காலத்தை மறந்து நூற்றி முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வின் புனைவுலகிற்குள் வாசகனை வாழ வைக்கிறீர்கள். அதுவே ’வெள்ளையானை’ நாவலின் வெற்றி.
நாவசன் மரிஸா ஆண்ட்ரு போன்ற ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் உயிர்ப்புடன் ஒளிர்கின்றன. நூலில் சேர்க்கப்பட்ட படங்கள் நாவலின் புனைவுத் தன்மைக்கு மேலும் வலு சேர்க்கின்றன.
எய்டனுக்கு இணையாக வலுவான பாத்திரமாகவும், தலித் மக்களின் குரலாகவும் நாவல் முழுக்க ஒலித்துக் கொண்டிருக்கும் காத்தவராயன், நீலகிரியின் தோடர் இனப்பெண்ணை மணந்த அயோத்திதாசர் என்பதை உணர முடிகிறது. அக்காலத்திய சாதியக்கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒலிக்கும் காத்தவராயனின் விமர்சனக் குரல் நாவல் நெடுக அழுத்தமாகப் பதிவாகியுள்ளது.
காத்தவராயன் கூறுவதைப் போல ‘இந்த மண்ணில் இன்னும் நூறு ஆண்டுக்காலம் நடக்கப் போகும் பெரும் போராட்டங்களின் முதல் அசைவு’ நிகழ்வதற்குக் காரணமான எய்டன் இருந்தபோதிலும், அவனது குற்றவுணர்வு தற்கொலைக்குத் தூண்டுகிறது. அனால் அதே தொழிலாளர்களின் செங்குருதித் தீற்றல்கள் படிந்த பனிக்கட்டிகள் மிதக்கும் மதுவை அவன் விழுங்கும் போது அதிர்ச்சி எழுகிறது. அவனது கருணையும் இரக்கமும் மறைந்து விட்டதா? அல்லது அதிகாரத்தோடு அவன் மேற்கொண்ட சமரச உடன்படிக்கையா? அல்லது ஆன்மாவின் மரணமா? அல்லது அது ஏசுவின் புனிதரத்தமா?
.
வெள்ளையானை நிறைவான அனுபவத்தை எனக்கு வழங்கியது.
அன்புடன்
நிர்மால்யா
அன்பின் ஜெ ,
வெள்ளை யானை இன்று என் கைகளில் கிடைத்துள்ளது,இன்றே வாசிக்கத் துவங்குகிறேன்.தங்களின் முதல் நூல் இது எனக்கு, வெளிவந்தவுடன் வாசிக்கும் வகையில்.பரவசமாக இருக்கிறது,விஷ்ணுபுரம் விழாவை ஆவலோடு எதிர்நோக்கி இருக்கிறேன் ,இம்முறை நேர் சந்திப்பில் அறிமுகம் செய்து கொள்ளலாமென.
நன்றிகளுடன்,
பிரகாஷ்,
கோவை

No comments:

Post a Comment