Tuesday, July 8, 2014

வெள்ளையானை கேசவமணி

ஜெயமோகனிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட பாணியிலான ஒரு கதை. புதிய நடை. புதிய பாணி. புதிய கதை. எந்தளவிற்கு மாறுபட்டது என்றால், நாவலின் முகப்பில் ஜெயமோகன் பெயர் இல்லாவிட்டால், இது அவர் எழுதியதுதான் என்று நம்பமுடியாத அளவிற்கு மாறுபட்ட நடை, பாணி. நீண்ட வாக்கியங்களைத் தவிர்த்து, எளிமையான, நளினமான வார்த்தைகளில் அமைந்த நடை நம்மை வசீகரிக்கிறது. கதையின் வாசிப்பில் நம்மை ரசனையோடு லயிக்க வைக்கிறது. எளிமையான மொழி, நடை, என்பது உண்மையில் வாசிப்பிற்கு வேண்டுமானால் எளிமையானவையாகத் தோன்றலாம். ஆனால் அதற்குப் பின்னால், சிற்பி ஒருவன் சிற்பத்தைச் செதுக்க  எத்தகைய உழைப்பைத் தர வேண்டுமோ அத்தகைய உழைப்பு இப்படைப்புக்கும் தரப்பட்டிருக்கிறது.
கதையின் ஆரம்பத்தில், 1878-ம் வருடத்தில், மதராசப்பட்டினத்தில் புனித ஜார்ஜ் கோட்டைக்கு அருகில் ஏய்டன் குதிரையில் பயணிக்கும் போதே நம் மனக் குதிரையும் காலத்தைக் கிழித்துக் கொண்டு, அந்த காலத்திற்குள் பாய்ந்துவிடுகிறது. நம் கற்பனை சிறகடித்துப் பறக்கிறது. ஏய்டன் நினைவுகளாக அவனது கடந்த கால வாழ்க்கையை, ஜெயமோகன் விவரித்துச் சொல்லும் பகுதியும், அயர்லாந்திலிருந்து கப்பலில் பயணித்து காஸாபிளாங்கா செல்வதுமான பகுதிகளும், புனைவின் உச்சம் என்று சொல்லலாம். காஸாபிளாங்காவில் அவன் விடுதி ஒன்றில் தங்கியபோது வரும் வர்ணணை நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.
போர்வைகள் அழுக்காக, அசைத்தால் தூசு பறக்க இருந்தன. சுவர்களின் இடுக்குகளில் இருந்து செம்புத்துருவல் போல மூட்டைப்பூச்சிகள் கலைந்தோடின. சன்னல் விளம்பில் அமர்ந்த மாடப்புறாக்கள் எந்நேரமும் ‘குர்ர் குர்ர்‘ எனக் குறுகிக் கொண்டே இருந்தன. பால் கறக்கும் ஒலி போல. குதிரைப்பட்டையை பாலீஷ் போடும் ஒலி போல. தச்சன் தன் சிறிய ரம்பத்தை இழுப்பது போல. கீழே கல்பாவிய முற்றத்தில் அவற்றின் எச்சம் வெள்ளையாகப் பரவிக்கிடந்தது. காலையில் இருந்து சக்கர ஒலியும் சவுக்கொலியும் குளம்பொலியும் இணைந்த முழக்கம் கேட்டுக்கொண்டிருந்தது.
அதன் பிறகு வரும் ஐஸ்ஹவுஸில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமையும், அங்கே பணியாற்றும் அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்பு இடங்களும் நம் மனதை பதைபதைக்க வைப்பவை. பாதிரியாருக்கும் ஏய்டனுக்கும் இடையேயான உரையாடல்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. வரலாற்றின் பக்கங்களில் தோய்ந்திருக்கும் கசப்பான உண்மைகள் இப்பக்கங்களில் வெளிப்படுகிறது. வரலாறு என்பதே மனிதர்களைப் பற்றியதுதானே? எனவே மனித மனங்களில் மனிதத் தன்மை முற்றாக உலர்ந்துவிட்டதையே இப்பகுதி பறைசாற்றுகிறது எனலாம். அவற்றைத் தொடர்ந்து ஏய்டன் பஞ்சத்தின் கொடுமையைக் காண செங்கல்பட்டு சென்று அங்கே காணும் காட்சிகளின் சித்தரிப்பும் நம்மை உறைய வைப்பன. அவை நம்மை வியர்த்து, விதிர்த்து செய்வதறியாது நிலைகுலைய வைக்கின்றன. ஜெயமோகனின் எழுத்து இப்பகுதிகளை, அதன் தாக்கத்தை நம் கண்முன் தத்ரூபமாக நிறுத்துகிறது.
ஏய்டன் நிதானப்படுத்திக் கொண்டபின் முன்னால் சென்றான். கிழிபட்ட, குதறப்பட்ட சடலங்கள். எல்லா வயதிலும் ஆண்கள் பெண்கள். அவர்களின் கந்தலாடைகளும் குடல்களும் பின்னிக் குழம்பி மண்ணில் இழுபட்டுக்கிடந்தன. கைகால்கள் பிய்ந்து பரவிக்கிடந்தன. புதர்களுக்குள் ஏராளமான சடலங்கள். மண்ணைக் குப்புற அணைத்தவை போல. ஒருவரை ஒருவர் இறுகப்பற்றிக்கொண்டது போல. ஆழ்ந்த உறக்கம் போல. வெள்ளெலும்புகள் கால்களில் மிதிபட்டன. பழைய பீங்கான் ஓடுகள் போல மண்டை ஓடுகள். சதை இன்னும் மிஞ்சியிருக்கும் இடுப்பெழும்புகள். மண்ணில் கலந்து மண்ணால் செய்யப்பட்டவை போன்ற எலும்புகள். எத்தனைபேர்!
நாவலைப் படித்துவரும்போதே, இப்படியான மனிதர்கள் ஏன் பிறந்து, இறக்க வேண்டும். மொழி, நாடு, இனம். சாதி என்று உலகம் முழுதும் இப்படியான மனிதர்கள் ஏதாவது ஒரு வகையில் ஒடுக்கப்பட்டே வருகிறார்கள். அன்றிலிருந்து இன்றுவரை சமத்துவத்துக்கான போராட்டம் உலகெங்கும் நடந்தபடிதான் இருக்கிறது. உண்மையில் மனிதர்கள் என்றாவது சமத்துவத்தை அடைய முடியும் என்பது கற்பனைதான்  போன்ற சிந்தனைகள் எழுகின்றன. வாசகனின் நாடியைப் பிடித்தது போல் ஜெயமோகன் ஏய்டன் மனதில் எழும் கேள்விகளாக பின்வரும் வரிகளைப் படைக்கிறார்.
விசித்திரம்! உலகம் முழுக்க அலைந்து பன்னிரு ஆண்டுகளில் அவன் கண்டுகொண்ட ஓர் உண்மை மனிதனைப் போல விசித்திரமான உயிர் பிறிதில்லை என்பதே. நம்ப முடியாத மகத்துவங்களும் நம்பவே முடியாத கீழ்மைகளும் பீரிட்டுக் கொண்டிருக்கும் இந்த புரிந்துகொள்ள முடியாத உயிர்த்தொகை மண்ணில் நீடித்து வாழ என்ன காரணம் இருக்க முடியும்? கடவுள்-அப்படி ஒருவர் இருந்தாக வேண்டும், இல்லையேல் இவற்றைத் தொகுத்துப்பார்க்ககூட ஒரு மையப்புள்ளி இல்லை-இந்த ஜீவராசியைக்கொண்டு என்ன உத்தேசித்திருக்கிறார்?
ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்கள் இருவர் கொல்லப்பட்டதையும், தான் நேரில் கண்ட பஞ்சத்தின் கோர தாண்டவத்தையும் குறித்த அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்க கர்னல் டியூக்கைச் சந்திக்கிறான் ஏய்டன். அவரைச் சந்திக்க காத்திருக்கும் மனிதர்களின் தோற்றங்களையும், மாளிகையின் செல்வச் செழிப்பையும் விவரிப்பதாக வரும் பகுதி நாவலில் மிக முக்கியமானது எனலாம். ஒரு பக்கம் பஞ்சத்தில் மக்கள் ஆடு, மாடுகள் போல சாகிறார்கள். ஆனால் இவர்களோ செல்வச்செழிப்பில் திளைக்கிறார்கள் என்பதை காட்டவே ஜெயமோகன் இத்தகைய சித்தரிப்புகளைத் தருகிறார். கவர்னரைச் சந்திக்க இலங்கையிலிருந்து வந்திருக்கும் சீமாட்டியும், முரஹரி அய்யங்காரும் பஞ்சத்தை எப்படித் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பலனடையலாம் என்றிருக்கிறார்கள.
            20131212_205348          20131212_230611
சந்தர்பங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் மனிதன் சமர்த்தன். தன் காரியம் கைகூட அவன் எத்தகைய செயலைச் செய்யவும் தாயாராய் இருக்கிறான். இதில் பாதிக்கப்படும் யாரும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. இதற்காக அவன் ஏதாவது நியாயம் கற்பித்துக்கொள்கிறான். அதை ஜெயமோகன்,“தங்கள் வாழ்க்கையை நியாயப்படுத்தாத மனிதர்கள் எவரும் இந்த மண்ணில் வாழ முடியாது” என்ற வரிகளின் மூலம் நம்மை உணரச் செய்கிறார். மிகப்பெரிய கண்டடைதலாக அவ்வரிகள் திரும்பத் திரும்ப மனதில் ஒலிக்கிறது.
ஆளவந்தவர்களுக்கும், ஆராயும் குணம் உள்ளவர்களுக்கும் வித்தியாசம் உண்டு. ஏய்டன் ஆராய்கிறான். எனவே அவனுக்கு எல்லாமே சிக்கலாகிறது. அரசாங்கத்தின் கைகள் எண்ணிலடங்கா என்பதையும், தான் அதில் ஒரு சிறு துரும்பு என்பதையும் அவன் புரிந்துகொள்கிறான். அந்த மக்களுக்காக அவன் ஆற்றும் செயல்கள் அனைத்தும் கடைசியில் விழழுக்கு இறைத்த நீராகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்களின் கையாலாகாத நிலையை அல்ல நாவல் சொல்வது. மாறாக, வாய்ப்புகள், வசதிகள் இருந்தும் அத்தகைய மக்களுக்கு சமயத்தில் உதாவது போவோரின் கையாலாகத நிலையையே இந்நாவல் சுட்டுகிறது. உண்மையில் பஞ்சம் என்பது வெளியில் இல்லை. உணவின் பற்றாக்குறையால் இல்லை. மனித மனங்களில்தான் பஞ்சம் இருக்கிறது. மனிதாபிமானத்துக்குப் பஞ்சம். உதவும் மனப்பான்மைக்குப் பஞ்சம். இரக்க குணத்திற்குப் பஞ்சம். எல்லாம் இருந்தால் அதைச் செய்ய இயலாத இயலாமைப் பஞ்சம்.
வெள்ளை யானை கட்டுக்கோப்பாக புனைப்பட்ட கதை. ஏய்டன் முயற்சிகள் அனைத்தும் எவ்வாறு முறியடிக்கப் படுகின்றன என்பதை நுட்பமாகவும் அற்புதமாகவும் சித்தரித்திருக்கிறார் ஆசிரியர். ஏய்டன் முறியடிக்கப்படுவதன் மூலம் மனித மனங்களில் உறைந்துள்ள சுயநலம் என்ற பூதம் அவனை எப்படி ஆட்டிவைக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம். நாவல் ஆரம்பத்திலிருந்து எவ்வாறு அமையவேண்டும் என்பதையும், அடுத்தடுத்து எத்தகைய காட்சிகளின் சித்தரிப்பு தேவை என்பதையும் ஜெயமோகன் நுட்பமாகத் தேர்ந்தெடுத்து கதையை திட்டமிட்டு நடத்திச் செல்கிறார்.
வரலாற்றின் கறைபடிந்த பக்கங்களை நாம் அறிந்துகொள்ள வழி செய்ததின் மூலம், நம்மை நாமே சுயவிசாரணை செய்துகொள்ள தூண்டுதலாய் இருக்கிறது ஜெயமோகனின் வெள்ளை யானை. தங்களின் சிறிய உரிமைகளுக்காக போராடத் துணிந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இப்படியான கோரமான முடிவு நேர இறைவன் ஏன் சம்மதிக்கிறான்? அவர்களுக்கு உதவாமல், உதவுபவர்களையும் அவர்களிடமிருந்து பிரித்து இறைவன் காட்ட விரும்புவதென்ன? உண்மையில் இறைவன் என்பதே கற்பனைதானோ? நம் மனப்பிரமைதானோ?
நீண்ட நாட்களுக்குப் பிறகு, என்னை வசீகரித்த, மனம் கவர்ந்த நாவல் எனில் அது வெள்ளை யானைதான் என்பதில் சந்தேகமில்லை. வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ததில் ஜெயமோகனின் புனைவின் திறம் வெளிப்படுகிறது. வரலாற்றை நாவலில் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கு வெள்ளை யானை ஒரு எடுத்துக்காட்டு.
ஒரு புத்தகம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு அடையாளமாக எழுத்துவின் இந்த வெளியீடு அமைந்திருக்கிறது. தரமான தாளில், நேர்த்தியான அச்சாக்கத்தில, சிறப்பான கட்டமைப்பில் வெள்ளை யானை வெளியாகியிருக்கிறது.

No comments:

Post a Comment