Tuesday, July 8, 2014

வரலாற்றின் தன்னிலைகள் -ராஜ் கௌதமன்

சுமைகளிலெல்லாம் பெருஞ்சுமை அன்னியனைச் சுமப்பது’’ (மெகாலே பிரபு) என்ற வாக்கியம் இங்கே எல்லாச் சாதிகளாலும் அன்னிய சாதிகளாக்கப்பட்ட தலித்துகளுக்கே உரிய வாசகமாகும். தமிழக நெடிய வரலாற்றில் தெலுங்கரின் ஆட்சிக்குப் பின் வந்த ஆங்கிலேயே வணிகமுதலாளிய காலனியாட்சியில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்துச் சாதிய அமைப்பாலும் பிரிட்டனின் வணிக முதலாளியத்தின் ஏகாதிபத்தியக் கொள்ளையாலும் தலித் மக்கள் சுமந்த பெருஞ்சுமையையும் வெற்றுச்சடலங்களாக மடிந்து மக்கிப்போன பேரவலத்தையும் ஜெயமோகனுடைய வெள்ளையானை (எழுத்து 2013) என்னும் வரலாற்று நாவல் காலம், இடம், கருத்தியல் மற்றும் அரசியல் பிரக்ஞையோடு படைத்துக் காட்டுகின்றது. இந்தப் படைப்பு தனியாக இன்றிப் படைப்புக்குள்ளே வாசகன் இருக்கிறான் என்றுதான் கூற வேண்டும். தமிழ்ப் பிராமண எழுத்தாளரான மாஸ்தியின் வரலாற்று நாவலுக்காகச் 'சிக்கவீர ராஜேந்திரன்' கன்னட மக்களால் 'மாஸ்தி எங்கள் ஆஸ்தி' என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டு வருகிறார். இன்றைய தமிழ்ச்சூழலில் இப்பேர்ப்பட்ட ஒரு வரலாற்று நாவல் வெளிவந்ததுகூடத் தெரியாத மவுனம்தான் நிலவும்.

'வெள்ளையானை' என்பது அமெரிக்காவிலிருந்து மதராஸ்பட்டினக் கடற்கரையில் இருந்த 'ஃபிரடெரிக் டியூடர் அண்ட் கம்பெனிக்கு (ஐஸ் ஹவுஸ்) இறக்குமதி செய்யப்பட்ட முப்பது டன் எடையுள்ள (ஏறத்தாழ பத்து யானைகளின் மொத்த எடை) ஐஸ் பாளத்தைச் சுட்டுகிறது. இதனைக் கையாண்டு ரம்பத்தால் அறுத்துச் சிறுசிறு துண்டுகளாக்கும் ஆபத்தான வேலையை உணவுக்காக அடிமைகளாக அமர்த்தப்பட்ட, பஞ்சம் பிழைக்க வந்த தலித் மக்கள் (300 பேர்கள்) செய்து செத்துமடிந்தார்கள். அந்த மக்கள் தலித் காத்தவராயன் (அயோத்திதாசரின் வாலிபப் பருவம்) போதனையாலும் ஏய்டன் என்கிற கற்பனாவாத மனிதநேயமிக்கக் காப்டனின் ஆதரவாலும் வேலை நிறுத்தம் செய்து தங்களுடைய முதல் உரிமைக்குரலை முழங்கிய அந்த நாலைந்து நாள் நிகழ்வுகளை ஆசிரியர் ஆத்மார்த்தமாகவும் தரும ஆவேசத்தோடும் புரட்சிகர மாந்தவிய நோக்கத்தோடும் படைத்துள்ளார். 1878 காலக்கட்டம் பற்றிக் கிடைக்கக்கூடிய தகவல்களான உயிர்ச்சுவடுகளைச் (Fossils) சேகரித்து அவற்றுக்கு உயிரூட்டுகின்றவாறு மீட்டுருவாக்கம் செய்து, அவர் கூறுவதுபோல அந்தக் காலகட்டத்தின் மாந்த மனநிலைகளையும் அன்றைய அரசியலையும் புனைவால் தொட்டு வெற்றி கண்டுள்ளார்.

இந்த 'வரலாறு' என்பது முற்றிலும் புறவயமானதாகவோ தெளிவாகப் பார்க்கக்கூடியதாகவோ அன்றி எளிதில் அறியத்தக்கதாகவோ இருப்பதில்லை. காலத்தின் வெகுதொலைவிலுள்ள வரலாறு நிகழ்காலத்தின் வசதிகளோடு முழுவதும் அறிந்திடத்தக்கதாகத் தோன்றும். ஆனால் அது பல்வேறு சாத்தியப்பாடுகளில் ஒன்றுதானே யொழிய நிச்சயமான ஒன்றன்று. நிகழ்கால வரலாறு, அந்த வரலாற்றின் தன்னிலைகளை வரலாற்றுக்குள்ளே இயங்குவதால் அதனை முற்றிலும் புறவயமாக அறுதியிட்டு விளக்கிட முடியாததாக இருக்கிறது. இந்த அடிப்படையான வரையறையைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மேலும் எந்த வரலாற்று நிகழ்விற்கும் தனியான ஒரு காரணம் இருக்க இயலாது. அது, பொருளாதார சமூக அரசியல் எதார்த்தங்களைக் கொண்ட பரந்துபட்ட ஒரு வலைப்பின்னலோடு பிரிக்கவொண்ணாதவாறு பிணைந்துள்ளது. 'வெள்ளையானை' படைத்துள்ள வரலாறு பன்முகப்பட்டது; பல வரலாறுகள் பிணைந்ததொரு வரலாறு. உலகையே கொள்ளையடித்த பிரிட்டிஷ் ஏகாதிபத்திய வரலாறு, அடிமைத்தனத்தை எதிர்த்த அயர்லாந்து மக்கள் வரலாறு, பிரெஞ்சுப் புரட்சியின் (1789) சுதந்திர சமத்துவ வரலாறு, ஷெல்லியின் அ-ராசக உணர்ச்சிக் கொழுந்துகள் எரிகின்ற அற்புதநவிற்சிக் (Romantic) கவிதை வரலாறு, மறுமலர்ச்சிக் கிறிஸ்தவ போதக வரலாறு, புதிய வணிக முதலாளிய பொருளாதார-அரசியல் அதிகாரத்தை, கிழக்கு இந்தியக் கம்பெனியாருக்கு 'துபாஷி'களாயிருந்த பிராமணர்கள் கைப்பற்றி சாதியத் தலைமையைத் தொடர்ந்த வரலாறு, பிராமணியத் தலைமையில் முற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஓரணியாகத் திரண்டு தலித் மக்களை அடிமைகளாக்கிய வரலாறு ஒவ்வொரு சாதியும் தன்னைத் தலித் சாதியிலிருந்து தூரப்படுத்தியும் தத்தம் கிளைகளுக்குள் ஒன்றையொன்று தூரப்படுத்தியும் சாதிய உயர் வரிசையைப் பிடிக்கப் போராடிய வரலாறு, ஆங்கிலேய மருத்துவம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், கல்விசார்ந்த வரலாறு, ஜார்ஜ் கோட்டைக்குள் வாழ்ந்த ஆங்கிலேய ஆட்சியாளர்கள், அதிகாரிகள், படைத்தலைவர்கள், டாக்டர்கள், நீதிபதிகள் அவர்களுடைய குடும்பங்கள் ஆகியவர்களுடைய நடையுடை பாவனைகள், நவீன வசதிகள், நாகரிக வாழ்க்கை, கலாச்சாரச் சீரழிவு, ஆன்மா இழந்த போலிக் கலாச்சாரம், இரட்டைவேடம், கயமை நிறைந்த உலகப்பார்வை ஆகியவற்றின் வரலாறு ஆகிய அத்தனை வரலாறுகளும் 'வெள்ளையானை' என்கிற வரலாற்று நாவலுக்குள் உயிர்ப்புடன் செயல்படுகின்றன.

கறுப்பர் நகரம் (பெரும்பறச்சேரி) என்றழைக்கப்பட்ட பகுதியில் விலங்குகள்கூட வாழாத குடியிருப்பில் வாழ்ந்த தலித்துகளின் கோரமான வறுமை நிலைமை பற்றியும் மதராஸிலிருந்து செங்கல்பட்டு போகிற சாலையின் இருமருங்கும் பஞ்சத்தால் கொலைப்பட்டினிப் பட்டாளங்களாக அலைமோதும் தலித்துகள் பற்றியும் செத்துவிட்ட, செத்துக் கொண்டிருக்கிற, தலித் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உடல்களை நாய்கள் குதறி இழுத்துத் தின்னுவது பற்றியும் நாவலில் புனைந்துரைக்கப்படும் பகுதிகள் தமிழ் நாவலுக்குப் புதியவை; தமிழ் நாவல்கள் அறியாதவை. இதற்கு அபாரமான கற்பனை ஆற்றல் மட்டும் போதாது. மொழியைச் செயற்கையாகக் கையாளுகை (manipulation) செய்தால் மட்டும் போதாது. நீதி உணர்ச்சியும் மனக்கிளர்ச்சியும் (spiritual), தார்மீகப் பொறுப்பும் (moral responsibility) வேண்டும்.

மேலும் வரலாற்றுத் தடயங்களைக் கொண்டு, அந்த வரலாற்றுக் காலத்து நாகரிக, கலாச்சாரச் சூழல்களையும் அவற்றோடு கொண்ட இயங்கியல் உறவால் கற்பித்துக் கொண்ட விழுமியங்களால் உருவமைத்த மாந்தரின் பார்வைகளையும் மனப்பாங்குகளையும் நியாயங்களையும் நடையுடை பாவனைகளையும் வாழ்விருத்தலுக்கான ஓர்மையான, ஓர்மையற்ற நோக்குகளையும் நம்பிக்கை-மூடநம்பிக்கைகளையும் அசட்டுத்தனங்களையும் கற்பனைகளையும் உடல்-உள்ளத் தூண்டுதல்களின் தேவைகளையும் தேவை நிறைவேற்றங்களையும் நிறைவேற்ற முறைகளையும் கண்மூடித்தனமான குருதி உறவு சார்ந்த வைராக்கியங்களையும் அவ்வக்காலத்து மாந்தவிய (humanistic) வகைகளையும்-நாவலின் மாந்தர்தம் மனம் மொழி செயல் தளங்களில் புலப்படுத்துவதன் வழியாக அந்தக்காலத்து அரசியலையும் அந்தந்தப் பாத்திரங்களின் தேர்வுகளையும் மனநிலைகளையும் புனைவுமயமாக்குவதன் வழியாக (பக்.20) அக்கால மாந்தரின் எதார்த்தமான உலகினை நிர்மாணம் செய்ய வேண்டிய பொறுப்பு வரலாற்று நாவலாசிரியனுக்கு உள்ளது. 'வெள்ளையானை' நாவலில் இந்தப் பொறுப்புணர்வு திடமாக இருப்பதால் இது தகவல்கள், தரவுகள் ஆகியவற்றின் தொகுப்பாகவோ அரசியல் பிரச்சாரமாகவோ தலித் மக்களின் போராட்ட அரசியல் வெற்றி பெறுவதற்கான ஓர் இலட்சிய ஆவேசத்தின் ஆசை நிறைவேற்றமாகவோ நழுவிச் சரிகிற பலவீனம் இல்லாமல் உள்ளது. இது ஒரு சாதனை. இதனால்தான் வாசகன் இந்நாவலை அந்தரங்கமாக வாசிக்கும்போது ஆசிரியன் கூடவே இருக்கிறான் என்ற பிரக்ஞையின்றி வாசிக்க முடிகிறது. (ஆயினும் ஓரிரு இடங்களில் ஒரு பொருளுக்கு மூன்றுமுதல் நான்கு உவமைகளை ஆசிரியன் அடுக்குகிறபோது இச்சாதனையில் ஒருசிறு நெருடல் ஏற்படுகிறது பக். 45, 190).

'வெள்ளையானை' நாவலில் ஜெயமோகன் படைத்த கற்பனையான, நிஜமான பாத்திரங்கள் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் வரலாற்று நாவல் பாத்திரங்களிலிருந்து வேறுபடுகின்றன. ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் போராட்டத்திற்குப் பின்புலமாகச் செயல்பட்ட காத்தவராயன் என்ற இளைஞன் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் 'காலணாதமிழன்' பத்திரிகை வழியே உரிமைக்குப் போராடிய பௌத்த மகான் அயோத்திதாசரின் 1878 ஆண்டுப் பதிப்பாக வருகிறான். இந்தக் காத்தவராயனின் தார்மீகக் கோபத்தின் வேகத்தை வெறும் சாதிவெறுப்பாகப் பார்த்திட இயலாது, தொடர்ந்து உரையாடுவதற்கு எப்போதும் திறந்த உள்ளத்தோடு தயாராக இருந்த இவரது பாத்திரப்படைப்பு கம்பீரமானது, இவருக்கு நேரெதிரான வாழ்நிலையிலிருந்து முரஹரி அய்யங்கார் பாத்திரம் (1892 ஏப்ரலில் கூடிய சென்னை மஹாஜன சபையில் ஆலோசனைக் கூட்டத்திற்கு நீலகிரிஜில்லா பிரதிநிதியாக அயோத்திதாசர் வந்து பறையரின் ஆலயப்பிரவேசம் பற்றிப் பேசத் தொடங்கியதும் அதனை நிராகரித்த சிவராமசாஸ்திரியின் முன்னோடி) அன்றைய எதார்த்தத்தைப் பதிவுசெய்யும் பாத்திரம். தலித்துகளைக் கடவுள் அவர்களது முன்ஜென்ம பாவங்களுக்காகத் தொடர்ந்து கொல்வார், அழிப்பார் என்று நம்புகிற பாத்திரம். பிராமணனாகிய தனக்கு முன் ஒரு தலித் வெள்ளை உடையும் தலைப்பாகையும் அணிந்து நின்ற ஒரு பெரும் பாவச் செயலுக்காகத் தலித் சாதிக்காரர்களில் லட்சம்பேரைக் கடவுள் அழிப்பார் (340) என்று நம்புகிறார். குதிரைவீரர்கள், அமைதியாக அமர்ந்து போராடிய தலித் மக்களைக் கதம் செய்த காட்சியைக் கூட்டுமனிதப் புணர்ச்சியாகக் கண்டுகளிக்கிறார். தலித்துகளை இப்படித்தான் அவரது வம்சாவழியினர் நோக்கி வந்திருக்கிறார்கள்.

நாவலுக்கெனப் புனைந்து கொண்ட நாவல் மாந்தரின் குணவிசேசத்தோடு நாவலின் பிரச்சினை உயிரோட்டமாகப் (organic) பிணைந்துள்ளதால் நாவலின் இலக்கியத்தகுதி பிரம்மாண்டமான பரிமாணத்தை எட்டுகின்றது. குறிப்பாக, ஐரிஷ் குடிமகனான காப்டன். ஏய்டன் பைர்ன் பாத்திரத்தின் உருவாக்கத்திற்கு ஏற்றவாறு, அவன் தலித் மக்கள்மீது ஆழ்ந்த அனுதாபம் கொண்டவனாகப் படைத்திருப்பது ஆசிரியருக்கு ஒரு பெரிய வெளியை நாவலில் திறந்து விட்டிருக்கிறது. ஏய்டனின் மிக எளிய குடும்பச்சூழல், ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்ட நிலை, ஷெல்லியின் அ-ராசக உயர்ச்சிக் கவிதையில் கொண்ட வெறித்தனமான ஈர்ப்பு, கற்பனாவாதத்தில் திளைக்கிற இளமை ஆகிய பின்புலங்கள் மதராஸபட்டினத்தில் மிருகத்தினும் கீழான வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டு மற்றெல்லாராலும் புறக்கணிக்கப்பட்ட தலித் மக்கள் மீது உணர்ச்சிகரமாக அனுதாபம் கொள்ளுவதற்கு ஏற்ற தருக்க நியாயங்களாக அமைகின்றன. ஏய்டனின் பாத்திரப்படைப்பு ஜெயமோகனுடைய கவித்துவ ஓட்டத்திற்கு மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. இயற்கைக் கோலங்கள், ஏய்டனுடைய அதிர்ச்சி, தோல்வி, கையாலாகாமை பற்றிய மனசஞ்சலங்கள் ஆகியவை பற்றிய வருணனைகளில் கவித்துவம் மீறிடுகிறது (பக்.219).

ஜெயமோகன் படைத்த 1878 காலகட்டத்தைச் சேர்ந்த அமெரிக்க, ஐரோப்பிய, பிரிட்டிஷ் பாத்திரம் ஒவ்வொன்றும் அசலானவை, தனித்துவமானவை. அமெரிக்க நிக் பார்மர் ஒரு கிழட்டுநரி, மக்கன்ஸி ஒரு பிழைப்புவாதி, காப்டன். ஆரோன் நடைமுறைவாதி, பாதர் பிரண்ணன் நிதானமான விமர்சகர், கவர்னர். டியூக் ஆஃப் பக்கிங்ஹாம் கொள்ளையடிக்கத் தெரியாத ஒரு கொள்ளைக்காரர், ரஸ்ஸல் பழுத்த காரியவாதி, ஆதம் ஆண்ட்ரூ ஒரு சம்மனசு (angel), உண்மைக் கிறிஸ்தவன். இந்த நாவல் மாந்தர் தத்தம் வாழ்நிலையோடு தாம் கொண்ட இருவழி ஊடுறவின் அனுபவத் தளங்களிலிருந்து பரிமாறுகிற விசயங்கள், அவர் தம் குருதியோடு கலந்தவை, மானிட வாடை நிரம்பியவை. அவர்கள் அக்காலத்துக் காலனிய, ஏகாதிபத்திய, நச்சுத்தனமான சாதிய, சூழல்களிலிருந்து இவற்றைத்தான் யோசித்திருக்க முடியும், பேசியிருக்க முடியும். இந்தச் சாத்தியப்பாட்டினை வாசகன் ஓர்மையில்லாமலே உள்வாங்க முடிந்துள்ளது. இது, ஆசிரியன் பிரசன்னமாகியபடியே மறைந்து போகும் புனைவுவித்தைதான்.

நாவலில் சிறிதளவு இடம்பெறும் அந்த மரிஸா என்ற ஆங்கில இந்திய மாது நாவலுக்குப் புதிதல்ல என்றாலும் அவளது தன்மான உணர்ச்சியும் எதிர்காலம் பற்றிய ஆழ்ந்த நம்பிக்கையும் ஏய்டனை அவளது காலடியில் வீழ்த்த வல்லவை.

இவ்வாறு திறமையாக ஒதுங்கியிருந்து பாத்திரங்களைப் பேசவைக்கும் ஆசிரியர், குறிப்பாகப் பாதிரியாரின் குதிரை வண்டி ஓட்டி ஜோசப் (இவன் கிறிஸ்தவ மதம் மாறிய தலித்) என்ற பாத்திரம் மூலமாகப் 'பெண்ணியம்' பேசுகிறார் (192-193). பெண்களும் தலித்துகளைப் போலத் தீண்டப்படாதவர்கள், தலித்துகள் வெளியே நிறுத்தப்படுகிறார்கள். பெண்கள் (உயர்சாதி) உள்ளே அடைக்கப்படுகிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம் (193).‘‘எங்களுக்காவது வெயிலும் காற்றும் கிடைக்கிறது. அவர்களுக்கு அதுவுமில்லை. அவர்கள் வெளியே போக அனுமதியே இல்லை. இருட்டறையில் பிறந்து அங்கேயே சாக வேண்டும். எல்லாரும் உண்டது போக எஞ்சியதை உண்ண வேண்டும். இரவும் பகலும் பசியுடன் சமைத்துக்கொண்டே இருக்க வேண்டும்’’ (193). இதனை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம், கருத்து சிறப்பானதாக இருந்தாலும் கூட! இது ஒரு காலப்பிழை.

காலனிய காலத்தில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுடைய தார்மீக வீழ்ச்சியையும் கலாச்சாரச் சீரழிவையும் இறுதி அதிகாரத்தில் தென்காசியில் நிகழும் இரவுவிருந்து வைபவத்தைக் கொண்டு ஆங்கிலேயரின் பேச்சுமுறையில் வரலாற்றுப் பிரக்ஞையோடு ஆசிரியர் வருணித்துச் செல்லுவது தமிழ்ப் புனைகதையில் ஓர் அபூர்வ நிகழ்வெனச் சொல்லலாம்.

நாவலை வாசித்து முடித்தபின் இனம்புரியாத ஒரு பாரம் வாசக மனதை அழுத்துவதை உணரலாம். இது வாசக மனசாட்சியைத் தட்டி எழுப்பவல்லது. பல விதத்திலும் சிறந்து விளங்கும் இந்த முதலாவது வரலாற்று நாவலில்-தலித் மக்கள், போராட்டம் பற்றிய முதல் வரலாற்று நாவலில் ஒற்றுப்பிழைகளும் எழுத்துப்பிழைகளும் அளவுக்கு அதிகமாக வந்திருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். அதோடு பக்கம் 276இன் இறுதியில் ‘‘என்றான் காத்தவராயன்’’ என்றிருக்க வேண்டிய இடத்தில் ‘‘என்றான் ஏய்டன்’’ என்றிருக்கிறது. அடுத்த பதிப்பில் இவற்றைத் திருத்தி வெளியிட வேண்டும். பிழைகளைத் திருத்தி உதவ நான் தயார்.
http://www.kalachuvadu.com/issue-169/page149.asp

No comments:

Post a Comment