Tuesday, July 8, 2014

வெள்ளையானை மனசாட்சியைக்காத்துக்கொள்ள ஒரு பயணம்-உரை

நண்பர்களே,
ஒரு பழைய வரலாற்று நிகழ்ச்சியிலிருந்து ஆரம்பிக்கிறேன். கேரளத்தில் உள்ள முக்கியமான பேராலயங்களில் ஒன்று வைக்கம். அங்கே ஆலயத்திலும் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் தெருக்களிலும் தீண்டாமைக்குள்ளான சாதியினர் நுழைவதற்குத் தடை இருந்தது. அநத ஆலயத்தின் தென்னந்தோப்புகளில் அன்று வேலைசெய்தவர்கள் ஈழவர்கள். அவர்கள் அன்றெல்லாம் தீண்டப்படாதவர்களாக நடத்தப்பட்டனர். வைக்கம் ஆலயத்தின் தெருக்களில் நடமாடும் உரிமைக்காக அன்று ஈழவர்கள் ஒரு போராட்டத்தை நடத்தினர். தெருமுனைகளில் அமர்ந்து கொள்ளும் போராட்டம் அது
டி.கெ.மாதவன்
திருவிதாங்கூரை பாலராமவர்மா மகாராஜா ஆட்சி செய்துகொண்டிருந்தார். போராட்டத்தை அறிந்த மன்னர் ஆலய வளாகத்தில் ஈழவர்கள் நுழைய அனுமதி அளித்தார்.காரணம் மன்னர் பாலராம வர்மா ஆங்கிலக்கல்வி கற்ற நாகரீக மனிதர். ஆனால் ஈழவர்கள் ஆலயவளாகத்தில் நுழைந்தபோது திருவிதாங்கூர் திவான் குஞ்சுகுட்டிப்பிள்ளை தளவாயின் ஆணைப்படி நாயர்படை கிளம்பிவந்து அத்தனை ஈழவர்களையும் கொன்று பின்னர் தளவாய்க்குளம் என்று பெயர் பெற்ற குளத்தில் போட்டுவிட்டது. மன்னரால் திவானை எதிர்க்க முடியவில்லை, ஏனென்றால் தளவாய்க்கு பிரிட்டிஷ் ரெஸிடெண்ட் துரையின் வலுவான ஆதரவு இருந்தது. மன்னர் பொம்மையாக இருந்தார்.
இந்த நிகழ்ச்சி அன்று சிறுவனாக இருந்த ஒருவரின் உள்ளத்தில் ஆழமான வடுவாக மாறியது. அவர் பெயர் டி.கெ.மாதவன். இந்தியாவில் பிற்பாடு பெரும் அலையாக எழுந்த ஆலயநுழைவுப்போராட்ட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியே அவர்தான். 1885ல் நடுத்தர ஈழவக்குடும்பத்தில் பிறந்த டி.கெ.மாதவன் இளவயதில் குலவழக்கப்படி சம்ஸ்கிருதமும் வைத்தியமும் கற்றார். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்றார். 1914ல் நாராயணாகுருவை மாதவன் சந்தித்தார். நாராயணகுருவால் உந்தப்பட்டு சமூகசீர்திருத்தப்பணிகளில் ஈடுபட்டார்
1914 ல் மாதவன் தேசாபிமானி என்ற செய்தி இதழை சொந்த செலவில் ஆரம்பித்தார். தேசாபிமானியில் ஆலயப்பிரவேசம் குறித்து பல கட்டுரைகள் எழுதிய மாதவன் 1916ல் ‘ஷேத்ரபிரவேசம்’ என்று ஆலயப்பிரவேசத்தைப்பற்றி ஒரு நூலும் வெளியிட்டார். 1916இல் கல்கத்தாவில் அன்னிபெசண்ட் தலைமையில் நடந்த பாரத மகாசபை கூட்ட கூட்டத்தில் அதற்காக ஒரு தீர்மானம் கொண்டுவரசெய்தார். அதன் பிரதி திருவிதாங்கூர் மன்னருக்கு அனுப்பப்பட்டது. 1918இல் மாதவன் திருவிதாங்கூரின் சட்டசபையான ஸ்ரீமூலம் சபைக்கு ஈழவர் பிரதிநிதியாக தேர்வுசெய்யப்பட்டார். 1918இல் ஸ்ரீமூலம் சபையில் அவர் நிகழ்த்திய முதல் உரையே ஆலயநுழைவுரிமை சார்ந்ததுதான்.
டிகே.மாதவன்
அதன்பின்னர்தான் மாதவன் காங்கிரஸ் உறுப்பினரானார். வட்டார காங்கிரஸ் பொறுப்பை ஏற்றார். 1921ல் செப்டெம்பரில் திருநெல்வேலி காங்கிரஸ் மாநாட்டுக்கு பிரதிநிதியாக வந்த டி.கெ.மாதவன் காந்தியைச் சந்தித்து ஆலயநுழைவுப்போராட்டத்தை நடத்தும்படி கோரினார். காங்கிரஸின் சார்பாக 1924 பிப்ரவர் 28 ஆம் தேதி வைக்கத்தில் டி.கெ.மாதவன் தலைமையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் கூட்டப்பட்டது. பொதுநடைபாதைகளிலும் கோயில்களிலும் நுழைய தாழ்த்தப்பட்டோர் உட்பட அனைத்து சாதிகளுக்கும் உரிமை உண்டு என்றும் அதற்கு எதிரான எந்தத் தடையும் மீறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதுதான் வைக்கம் போராட்டத்தின் தொடக்கம்
‘வைக்கம் வீரர்’ டி.கே.மாதவன்தான். தன் இனத்தின்மீது சுமத்தப்பட்ட பழியை எதிர்த்துப்போராட்டத்தை முன்னெடுத்து வழிநடத்தி முடித்தவர். அந்தப்போராட்டத்தைப்பற்றி வாசிக்கையில் ஒரு விஷயத்தை நான் கவனித்தேன். 1925 அக்டோபர் வரை ஏறத்தாழ இரண்டாண்டுக்காலம் வைக்கம்போராட்டம் நடந்தது. அது பலபடிகளாக பல திருப்பங்களுடன் நடைபெற்ற ஒன்று. அதில் இரண்டு சோர்வுக்காலகட்டங்கள் உண்டு. முதல்காலகட்டம் 1924 நவம்பரில் பெய்த பெரும் மழையினால் உருவானது. கிட்டத்தட்ட போராட்டமே நின்றுவிட்ட நிலை உருவானது. மீண்டும் போராட்டத்தைத் தொடங்க காந்தியே நேரில் வரவேண்டியிருந்தது.
இரண்டாவது சோர்வுக்காலகட்டம் போராட்டத்தின் கடைசியில் உருவானது. அந்தப்போராட்டமே இந்துமதத்தை அழிக்க அன்னியமதத்தினர் நடத்துவது என்று உயர்சாதியினரால் கடுமையான பிரச்சாரம் செய்யப்பட்டது. அதற்கு ஆதரவும் ஏறியது. ஆகவே காந்தி அப்போராட்டத்திலிருந்த மாற்றுமதத்தவரையும் பிறபகுதியினரையும் விலகிக்கொள்ள உத்தரவிட்டு முற்றிலும் இந்துச்சாதியினராலேயே அப்போராட்டத்தை நடத்தினார். உயர்சாதி இடைநிலைச்சாதி தாழ்த்தப்பட்டோர் ஆகிய மூவருமே அந்தப்போராட்டத்தை நடத்தும்படி செய்தார்
வில்லியல் எச் பிட்
இந்தத் தருணத்தில் உயர்சாதியினர் பொறுமையிழந்து நேரடி வன்முறையில் இறங்கினர். போராட்டக்காரர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். போராட்டக்காரர்களின் குடும்பங்கள் தாக்கப்பட்டன. வன்முறை நூற்றுக்கணக்கில் பெருகியது. அரசும் காவல்துறையும் அதை வேடிக்கைபார்த்தன. காந்தி பலருக்கும் வேண்டுகோள் விடுத்தார். கடைசியில் அன்று திருவிதாங்கூரின் காவல்தலைவராக இருந்த வில்லியம் எச் பிட் அவர்களுக்கு நேரடியாக ஒருகடிதம் எழுதினார். ‘நான் உங்கள் தனிப்பட்ட மனசாட்சியை நோக்கி கேட்கிறேன். சட்டதிட்டங்களை விடுங்கள், உங்களால் இதை ஏற்கமுடிகிறதா?’ என்றார் காந்தி.
வில்லியம் எச் பிட் அவர்களை அந்த வினா சங்கடப்படுத்தியது. வன்முறைகளை மேற்கொண்டு அனுமதிக்கமுடியாது என்று அவர் திவானுக்கு கடுமையாக அறிவுறுத்தினார். அவர் நேரடியாகச் சென்று அன்றைய திருவிதாங்கூர் மகாராணி சேது லட்சுமி பாயைக் கண்டு கறாரான தொனியில் பேசினார். அவரே ஒரு சமரசத்திட்டத்தை வகுத்தார்.அவ்வாறுதான் வைக்கம்போராட்டத்தில் வெற்றியை நோக்கி நகரமுடிந்தது. 1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தை திரும்பப்பெற காந்தி ஆணையிட்டார். அரசுக்கும் காந்தியவாதிகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதற்கு முன்பு நிகழ்ந்த ஒன்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள்ளும் ஆலயப்பாதைகளிலும் அனுமதிக்கமுடியாது என்று கடுமையான நிலைப்பாடு எடுத்தவர் இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடு. 1925ல் அன்று தேசத்தலைவராக கருதப்பட்ட காந்தி அவரது வீட்டுக்கே சென்று தீண்டாமையைப்பற்றி மறுபரிசீலனைசெய்யும்படி மன்றாடினார். காந்தியைச் சந்திக்கவே இண்டந்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடு சம்மதிக்கவில்லை. காந்தி அவமதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். அவரது மனசாட்சியுடன் பேச காந்தியால் முடியவில்லை.
ஆனால் ஆதிக்கசக்தியாக இருந்த பிரிட்டனின் பிரதிநிதியாக விளங்கிய ஒரு காவல்துறை அதிகாரியின் மனசாட்சியை நோக்கி காந்தியால் பேசமுடிந்தது. நண்பர்களே, நான் கவனித்தது இந்தவிஷயத்தை மட்டும்தான். ஆங்கிலேய ஆதிக்கம் என்பது ஒற்றைப்படையானது அல்ல. வரலாற்றை ஒற்றைப்படையானதாகச் சித்தரிக்கும் மூர்க்கம் எப்போதுமே உண்மைக்கு மிகமிகத் தூரமானது. வெறுப்பரசியலை உருவாக்கி ஆதிக்கத்தை கட்டமைக்க மட்டுமே அது பயன்படும். வரலாற்றின் உண்மையுடன் அதனால் உரையாடமுடியாது
நீண்ட இடைவேளைக்குப்பின் நான் ராய் மாக்ஸ்ஹாம் எழுதிய ‘இந்தியாவின் மாபெரும் வேலி’ என்ற நூலை வாசித்தேன். [The greatest hedge of India ,Roy Maxham] அந்நூல் இந்தியாவின் பஞ்சங்களைப்பற்றிய ஒரு ஆழமான புரிதலை உருவாக்கியது. ஏற்கனவே வாசித்துக்கொண்டிருந்த புள்ளிவிவரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் தொகுத்துக்கொள்வதற்கான நூலாக அது அமைந்தது. அழுத்தமான ஒரு மனசாட்சியின் குரல் அந்நூல்.
இந்த இருவெள்ளைக்காரர்களின் மனசாட்சியைத்தான் நான் கவனித்தேன். வெள்ளையானை சந்தேகமில்லாமல் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் ஈவிரக்கமில்லாத சுரண்டலைத் திறந்து காட்டக்கூடிய நாவல். அந்தச்சுரண்டலின் அத்தனை முகங்களும் இந்நாவலில் சுருக்கமாக திட்டவட்டமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.அதேசமயம் ஆங்கிலேயரின் மனசாட்சியும் நம்மிடம் உரையாடியிருக்கிறது என்ற உண்மையும் இந்நாவலில் உள்ளது.
ஏய்டனுக்கு முன்னுதாரணமாக அமைந்த உண்மைமனிதர் வில்லியம் பிட் அவர்கள்தான். இந்தத் தருணத்தில் அவரை வணக்கத்துடன் நினைத்துக்கொள்கிறேன். ஆம், முரஹரி அய்யங்காரில் உள்ளது இண்டன் துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடின் குரல்தான். அது அவரைப்போன்று அந்த யுகத்தில் ஓங்கி ஒலித்த ஆதிக்கசாதியின் தரப்பு.
ராய் மாக்ஸ்ஹாம்
ஆதிக்கத்தை உருவாக்கும் நோக்குடன் சமைக்கப்படும் வரலாறு ஒற்றைப்படை உண்மைகளை உருவாக்குகிறது. இலக்கியம் என்றென்றும் அதற்கு எதிரான கலகம்தான். அது எல்லா வகையான ஆதிக்க அரசியல் கருத்தாக்கங்களுக்கும் தொந்தரவாக நின்றுகொண்டிருக்கிறது. எல்லா தரப்பும் அதைத் தங்கள் எதிர்தரப்புடன் சேர்த்துவிடுகின்றன. அப்படி எதிர்க்கப்படுவதே ஒரு படைப்பு உண்மையின் பக்கம் நின்றுகொண்டிருக்கிறதா என்பதற்கான ஆதாரமாகும்.
ஆங்கிலேய ஆட்சிதான் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்புக்கான சக்தி என ஒருவர் நம்புவாரென்றால் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களில் தொண்ணூறுசதவீதம் பேரைக் கொன்றழித்தது ஆங்கிகேய ஆட்சியே என்று சித்தரிக்கும் இந்நாவல் அவருக்கு எரிச்சலை ஊட்டும். இந்தியாவின் பண்பாடும் பாரம்பரியமும் அப்பழுக்கற்றவை அத்தனை தீமைகளுக்கும் காரணம் அன்னியர்கள்தான் என நம்பும் ஒருதரப்பு இருக்குமென்றால் இந்நாவல் அவர்களுக்கும் கொதிப்பை ஊட்டும். அந்த மாபெரும் பஞ்சங்களில் நம்மில் மிகப்பெரும்பாலானவர்களின் மனசாட்சி மண்மூடிக்கிடந்தது என்பதும் ஏய்டனைப்போல ஆன்ட்ரூ போல பிரண்ணன் போல மிகச்சில ஐரோப்பியரின் மனசாட்சியை நம்பியே இங்கிருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் குரலெழுப்ப முடிந்தது என்பது அவர்களை பொறுமையிழக்கச் செய்யும்.
ஆம், அங்கும் இங்கும் மனசாட்சியின் குரல் சிறுபான்மையினருடையதுதான். இந்தியாவில் எழுந்த எதிர்ப்புகளை இந்நாவல் குறிப்பிடத்தான் செய்கிறது. ஆனால் ஆதிக்கத்தரப்பில் இருந்து எழுந்த மனசாட்சியின் குரலுக்கு மிகப்பெரிய மதிப்புண்டு. அங்குமிங்குமாகச் ஒருசிலர் இங்கே பேசியிருந்தால் அது முக்கியமானதாக ஒருபோதும் இருக்கமுடியாது. பேசவேண்டியிருந்தது நம் சமூகத்தின் கூட்டுமனசாட்சி. எழுந்திருக்கவேண்டியது நம் கூட்டுக்குரல்.
எளிய நேரடியான கேள்விகள். அந்தக்காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட எத்தனை வாழ்க்கைவரலாறுகள் நமக்குள்ளன. எத்தனை நூல்கள் எழுதப்பட்டுள்ளன. நண்பர்களே, நம்முடைய பதிப்பியக்கம் உருவான காலகட்டமே அதுதான். நம்முடைய செவ்வியல்நூல்கள் அச்சுக்கு வந்த காலகட்டம். ஏன் நம்மில் எவருக்கும் அதைப்பற்றி எதையும் பதிவுசெய்யவேண்டுமெனத் தோன்றவில்லை? ஏன் உவேசாமிநாதய்யரின் வரலாற்றில் ஒரு வரிகூட குறிப்பிடப்படவில்லை? சைவசித்தாந்தம் பற்றி நூற்றுக்கணக்கான நூல்களை எழுதிக்குவித்தவர்கள் ஏன் அதை ஒரு பேசுபொருளாகவே கருதவில்லை?
எண்ணிப்பாருங்கள், நம் மக்கள்தொகையிலேயே கால்வாசிப்பேர்.ஒரு கோடிப்பிணங்கள் இன்று கேட்கும்போதே நம் நெஞ்சுபதறுகிறதே அன்று எவருக்கும் ஏன் அது ஒரு செய்தியாகக்கூட முக்கியமெனப் படவில்லை? நம்முடைய மடங்கள் என்ன செய்தன? நம் பிரபுக்கள் என்ன செய்தனர்? அனல்போல் எரியும் நீதியுணர்வுடன் சுவாமி விவேகானந்தர் எழுந்து வருவதுவரை இந்த தேசம் மண்பொம்மைபோலக் கிடந்ததே ஏன்? அதற்கான காரணிகளை நம் பண்பாட்டில் கண்டுபிடிக்கவேண்டும். அதை வேருடன் பறித்து வீசவேண்டும். இல்லாவிட்டால் நமக்கு மீட்பில்லை.
அன்று நம் மனசாட்சி எழவில்லை என்பதே அப்பட்டமான வரலாற்று உண்மை. அந்த உண்மைக்கு மேலே துணியைப்போட்டு மூடினோமென்றால் இன்னும் மனசாட்சியற்ற மனிதர்களாகவே நாம் ஆவோம். மேலும் மேலும் வறண்டவர்களாக, எந்த பேரழிவுக்கு அநீதிக்கும் முன்னால் நம்முடைய பாரம்பரியமான சாதியநோக்கை மட்டுமே வைப்பவர்களாக ஆவோம். எந்தப் பிற்போக்கு நிலைபாட்டுக்கும் எந்த அநீதியான தரப்புக்கும் தர்க்கபூர்வமான விளக்கங்களை அளிக்கமுடியும். இலக்கியம் அந்த தர்க்கங்களுடன் பேசுவதில்லை. அது வாசக மனசாட்சியுடன் மட்டுமே பேசுகிறது
வரலாறு என்றுமே சங்கடமானது. சுபாஷ் சந்திரபோஸைப்பற்றி ஓர் ஒளிமிக்க சித்திரத்தை நாம் உருவாக்குகிறோம். ஆனால் மறுபக்கம் என ஒன்றுண்டு. 1943ல் சிங்கப்பூரை ஜப்பானியர் கைப்பற்றியபோது தாய்லாந்து, பர்மா வழியாக அஸாமில் கோகிமா வரை 500 கிமீ தூரத்துக்கு ஒரு பெரும் ரயில்பாதையைப் போட முயன்றனர். ரொமுஷா என்று அழைக்கப்பட்ட கட்டாய உழைப்பாளிகள் அதில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களில் மிகப்பெரும்பாலானவ்ர்கள் தமிழர்கள். பஞ்சம்பிழைக்க மலேசியாவுக்கும் பர்மாவுக்கும் வந்து தோட்டங்களில் வேலைசெய்த தலித் மக்கள்
மிகமிகக் கடுமையான வேலைச்சூழலிலும் கடுமையான தண்டனைகளிலும் அவர்களில் கிட்டத்தட்ட ஒருலட்சம் பேர் இறந்திருக்கலாமென ஜப்பானிய ஆவணங்கள் சொல்கின்றன. மூன்றுலட்சம்பேர் வரை செய்த்திருக்கலாம் என்பது தமிழர்களின் வாய்மொழிவரலாறு. இன்னொரு மக்களுக்கு என்றால் எத்தனை பேரிலக்கியங்கள் எழுதப்பட்டிருக்கும்? மலேசிய எழுத்தாளரான சண்முகம் எழுதிய சயாம் மரணரயில் என்ற நாவல் மட்டுமே இன்றுவரை எழுதப்பட்டுள்ளது.
இந்த ரயில்பாதை வழியாக பலமுறை சுபாஷ் பயணம் செய்திருக்கிறார். அந்த மாபெரும் மானுட அழிவு அவரது கவனத்துக்கு வரவில்லை. அவர் அதை ஜப்பானியர்கள் இந்தியாவை வென்று தன் கையில் தருவதற்கு எடுத்துக்கொள்ளும் கட்டணம் என்று மட்டும்தான் நினைத்திருப்பார். அதுவும் வரலாறுதான். அதை எழுதும்போது சுபாஷ் சந்திரபோஸை மாபெரும் ஒளிவட்டத்துடன் மட்டுமே பார்க்கும் சிலருக்கு ஒவ்வாமையே உருவாகும். ஆனால் இலக்கியம் என்பது ஓர் அறுவைச் சிகிழ்ச்சைக்கத்தி. அதற்கு பரிவுகள் இல்லை. அது நோயை நோக்கியே செல்லும். உண்மையை மட்டுமே வாழவைக்கும்
ஒரு புனைகதையில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது, எந்த அளவுக்கு புனைவு உள்ளது என எப்படிக் கண்டுபிடிப்பது? புனைவை உண்மை என சிலர் எண்ணிக்கொண்டால் என்ன செய்வது? ஒரு நண்பர் இதை என்னிடம் கேட்டார். நண்பர்களே, இந்தக்கேள்விக்குப் பின்னால் உள்ளது ஒரு எளிய புரிதல். அதாவது வரலாறு எப்போதும் தூயவடிவில் எழுதப்பட்டு நம் முன் பரிமாறப்பட்டுள்ளது என்ற எண்ணம். உண்மையில் அப்படித்தானா? இல்லை, வரலாறே எப்போதும் புனைவுடன் கலந்துதான் நமக்குக் கிடைக்கிறது.
தியாகராஜசுவாமிகளைச் சந்திக்க ராமன் சீதையுடன் திருவையாறு தெருவில் நடந்து வந்தான். அவர் ‘நன்னு பாலிம்ப ’ என்ற பாடலைப் பாடினார். இது நம் இசைப்பள்ளி பாடநூல்களில் உள்ள வரலாறு. இதை நாம் நம்புகிறோமா என்ன? சரபோஜியின் சபைக்கு வட இந்திய இசைவாணர்கள் நிறையவந்தனர். அந்த தொடர்புகாரணமாக தமிழக இசைமரபில் ஆழமான மாற்றங்கள் உருவானது, விளைவாகவே தியாகராஜரின் இசைமரபு பிறந்தது என ஒரு வரலாறு எழுதப்பட்டால் முந்தையதில் இருந்து அதை வேறுபடுத்திப்பார்க்க நம்மால் முடியாதா என்ன?
எல்லா காலத்திலும் வரலாறு இப்படித்தான் பல்வேறுவகையான மொழிபுகளில் இருந்து நம்மால் பிரித்து எடுக்கப்படுகிறது. நேற்று புனைவை வரலாறாகச் சொன்னார்கள். அதையே நாம் பிரித்தறிந்தோம். இன்று வரலாற்றை புனைவாகச் சொல்கிறோம். அதன் சாராம்சமென்ன என்பது எந்த வாசகனுக்கும் தெரியக்கூடியதே.
ஏன் வரலாற்றைப்புனைவாக ஆக்கவேண்டும்? இன்றுகாலை நீங்கள் வீட்டைவிட்டுக் கிளம்பி இங்கே வந்ததுவரையிலான நிகழ்ச்சிகளை வரிசையாகச் சொன்னால் அது வரலாறு. ஆனால் அதை ஒரு நண்பரிடம் சொல்லப்போனால் நீங்கள் அதை செறிவாக்குகிறீர்கள். ஒரு மையம் நோக்கிச் சுருக்குகிறீர்கள். ஒரு கருத்தை நோக்கிக் கொண்டுசெல்கிறீர்கள். அதுதான் வரலாற்றுப்புனைவு
இந்து வரலாறு எனும் களத்தில் நிகழ்ந்த மானுட அறப்பிரச்சினைகளைப்பற்றிப் பேசும் ஒரு ஆக்கம். அந்த அறப்பிரச்சினைகளை முன்வைக்கும்முகமாக வரலாறு இதில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றின் களம் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். சில எளிய தரவுகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கும். சில விஷயங்கள் கற்பனையால் நிரப்பப்பட்டிருக்கும். உதாரணமாக எனக்கு அந்தப் பனிக்கட்டி மிகப்பெரிதாக இருந்தால் மட்டுமே குறியீட்டுக்கு ஏற்றதாக இருக்கும். ஆகவே அதன் உண்மை அளவைவிட பெரிதாகவே அது நாவலில் சொல்லப்பட்டுள்ளது.
ஆனால் வரலாற்றிலிருந்து திரண்டுவந்து என்னை அடைந்த ஓர் உண்மை எந்தவிதச் சமரசமும் இல்லாததாகச் சொல்லப்பட்டிருக்கும். ஒருவரலாற்றுநாவலின் வரலாற்றுத்தரிசனத்தில் அது சமரசம் செய்துகொண்டிருந்தால் அது நல்ல நாவல் அல்ல. அது தகவல்களில் செய்துகொண்ட தெரிவை கொண்டு அந்த நாவலின் தரிசனத்தை மறுப்பது வாசிப்பும் அல்ல.
வெள்ளையானை முன்வைக்கும் தரிசனம் ஒரு தனிமனிதனின் வியப்புதான். ஆற்றாமையும் கோபமும் ஆங்காரமும் கொண்ட வியப்பு. தன் மூதாதையரை நோக்கி அவன் கேட்கும் கேள்வி அதிலுள்ளது. ஏன் நம் மனசாட்சி மரத்திருந்தது, ஏன் நாம் நம்மில் பாதிபேரை எந்த வித உறுத்தலுமில்லாமல் சாகவிட்டோம். ஏன் அதை ஒரு செய்தியாகக் கூட நாம் கருதவில்லை? அந்த வினா எனக்கு முக்கியமானது. அப்படி அவர்களை ஆக்கிய அனைத்திலிருந்தும் நான் விடுபட்டு என் மனசாட்சியைக் கண்டுகொள்வதற்கான பயணத்தில் அது எனக்கு மிகமிக முக்கியமானது. அதுதான் இந்நாவலின் சாரம்
நன்றி
[17-12-2013 அன்று காரைக்குடியில் நிகழந்த வெள்ளையானை விவாதக்கூட்டத்தில் ஆற்றிய உரை

No comments:

Post a Comment